"கமலா ஹாரிஸ் கறுப்பினத்தை சேர்ந்தவரே இல்லை.." டிரம்ப் பகீர் பேச்சு.. வெடித்த புதிய சர்ச்சை
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் கறுப்பினத்தைச் சேர்ந்தவரா இல்லை.. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரா என்பது தெரியவில்லை என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

இதில் 78 வயதான கமலா ஹாரிஸை குறிவைத்து குடியரசு கட்சித் தலைவர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். அதிலும் சமீப காலங்களில் கமலா ஹாரிஸின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கமலா ஹாரிஸ்: இதற்கிடையே ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கமலா ஹாரிஸ் உண்மையாகவே கறுப்பினத்தைச் சேர்ந்தவர் தானா இல்லை இதை வைத்து இன ரீதியான அரசியல் செய்கிறாரா என்று டிரம்ப் கேள்வி எழுப்பினார்.. இந்தாண்டு அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், டிரம்பின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர் எப்போதுமே கடந்த காலங்களில் தனது இந்தியப் பாரம்பரியம் குறித்தே பேசி வந்துள்ளார். கடந்த காலங்களிலும் அவர் இந்தியப் பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் கறுப்பினத்தவர் என திடீரென சொல்ல ஆரம்பித்தார். அதுவரை அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது.
கறுப்பினத்தவரா: இப்போது கேட்டால் தான் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்கிறார். தன்னை கறுப்பின பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதனால் எனக்குத் தெரியாது.. அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரா அல்லது கறுப்பினத்தைச் சேர்ந்தவரா எனக்குத் தெரியாது" என்று பேசினார்.
அமெரிக்க வரலாற்றில் துணை அதிபர் ஆன முதல் கறுப்பினத்தவர், முதல் பெண் மற்றும் முதல் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்தச் சூழலில் டிரம்பின் இந்த சில கேள்விகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
திடீர் ட்விஸ்ட்: இதற்கிடையே டிரம்ப் மேலும் கூறுகையில், "நான் அனைவரையும் மதிக்கிறேன்.. அவர் வெளிப்படையாக இல்லை என்பதே எனது புகார். ஏனென்றால் அவர் இத்தனை காலமாக இந்தியராக இருந்து இருக்கிறார். திடீரென அனைவருக்கும் ட்விஸ்ட் தரும் வகையில் கறுப்பினத்தைச் சேர்ந்தவராக மாறிவிட்டார்" என்று அவர் தெரிவித்தார்.
ஜே.டி.வான்ஸ்: முன்னதாக கமலா ஹாரிஸ் குறித்து டிரம்பின் குடியரசு துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் பேசும் போது, "எங்கள் சொந்த வாழ்க்கையில் மோசமான தேர்வுகளைச் செய்த பரிதாபமான நிலையில் இருக்கும் குழந்தை இல்லாத பெண்கள் அமெரிக்காவை வழிநடத்தினால் அமெரிக்காவும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். நீங்கள் ஜனநாயக கட்சியைப் பாருங்கள்.. கமலா ஹாரிஸ், பீட் புட்டிகீக் என்று குழந்தைகள் இல்லாதவர்களே அக்கட்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள்" என்று அவர் பேசியது சர்ச்சையானது.
கலிபோர்னியாவில் பிறந்த கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்த ஷியாமலா கோபலன்.. கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் டொனால்ட் ஜே ஹாரிஸ். இந்த டொனால்ட் ஹாரிஸ்- ஷியாமலா கோபலன் தம்பதிக்கு 1964ம் ஆண்டில் மகளாகப் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸுக்கு 7 வயதாக இருந்த போதே அவரது பெற்றோர் விவாகரத்து பெற்றனர்.












Click it and Unblock the Notifications