குடியேற்ற விவகாரத்தில் கமலா ஹாரிஸ் நிலைப்பாடு என்ன தெரியுமா? இந்தியர்களுக்கு இது முக்கியமாச்சே
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. பைடன், கிளின்டன் எனப் பலரது ஆதரவும் கமலா ஹாரிஸுக்கு இருக்கிறது. இந்த நேரத்தில் கடந்த 4 ஆண்டுகள் அவரது செயல்பாடுகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. துணை அதிபராக அவர் பல்வேறு சாதனைகளைச் செய்திருந்திருந்தாலும் அவரது பதவிக் காலத்தில் சில விமர்சனங்களும் எழுந்தே இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலகிவிட்ட நிலையில், அடுத்து ஜனநாயக கட்சியின் அதிபர் யார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இதில் ஜோ பைடன் தொடங்கி பலரும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

பைடன் ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்துள்ள கமலா ஹாரிஸ் கடந்த 4 ஆண்டுகளில் செய்த முக்கிய விஷயங்கள் என்ன.. சொதப்பிய விஷயங்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
குடியேற்றக் கொள்கை: கமலா ஹாரிஸ் துணை அதிபராக இருந்த கடந்த 4 ஆண்டுகளில் அவர் எதிர்கொண்ட மிக முக்கியமான சவால் என்றால் அது குடியேற்றம் தொடர்பானது தான். மத்திய அமெரிக்காவில் இருந்து பொதுமக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதன் மூல காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யக் கமலா ஹாரிஸை பைடன் நியமித்தார். இருப்பினும், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் மக்கள் நுழைவது தொடர்கதையாகவே இருந்தது. இந்த விவகாரத்தில் கமலா ஹாரிஸ் உறுதியான முடிவை எடுக்கத் தவறியதாகப் பலரும் நினைக்கிறார்கள்.
சட்ட விரோத குடியேற்றத்தைத் தடுக்க குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகள் உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். சில முடிவுகளையும் எடுத்தார். இருப்பினும், அவை புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் இருக்கிறது. இதனால் மெக்சிகோ எல்லை வழியாக மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவது தொடர்கதையாகவே இருந்தது.
துணை அதிபர்: கமலா ஹாரிஸ் கடந்த 4 ஆண்டுகள் தனது இமேஜை தக்கவைக்கக் கடுமையாகப் போராடினார். அவர் தொடர்ச்சியாக பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு தன்னை பற்றி நல்ல இமேஜ் உருவாக்க முயன்றாலும் அதற்குப் பலனில்லை. பைடனை விடக் கமலா ஹாரிஸுக்கு ரேட்டிங் மோசமாகவே இருந்து வந்துள்ளது. மேலும், நேர்காணல்களின் போது அவர் எந்தவொரு கேள்விக்குத் தெளிவாகப் பதில் அளிப்பதில்லை என்ற விமர்சனங்கள் அவர் மீது அதிகமாகவே இருக்கிறது. இது கடுமையான நெகடிவ் இமேஜை ஏற்படுத்தியுள்ளது..
துணை அதிபர் அலுவலகத்திற்குள் முரண்பாடுகள் இருப்பதாக வெளியான தகவல், அங்கு வேலை செய்த ஊழியர்கள் ராஜினாமாக்கள் ஆகியவையும் கமலா ஹாரிஸ் இமேஜை பாதித்து இருக்கிறது. குறிப்பாக வரிசையாக அடுத்தடுத்து துணை அதிபர் அலுவலகத்தில் நடந்த ராஜினாமாக்கள் உறுதியற்ற தன்மையைக் காட்டுவதாக இருந்தது. இது கமலா ஹாரிஸின் தலைமைப் பண்புகள் குறித்தும் கேள்வி எழுப்புவதாக இருந்தது. மேலும், அவரால் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்பது குறித்தும் பலரும் கேள்வி எழுப்பினர்.
மேல் சபை: அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட்டில் அவரது செயல்பாடுகள் குறித்த கலவையான விமர்சனங்களே உள்ளன. வாக்களிக்கும் உரிமைகள், போலீஸ் துறை சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் அவரால் தொடர்ந்து குரல் கொடுத்தார். இருப்பினும், வழக்கம் போல எம்பிக்கள் ஆதரவு இல்லாததால் அவரால் இந்த விவகாரங்களில் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. இப்படியான சூழலில்தான் அவர் தனது துணை அதிபர் பதவியை நிறைவு செய்கிறார்.
அடுத்து என்ன: அடுத்த கட்டமாக அவர் அதிபர் ரேஸில் களமிறங்க ரெடியாகிவிட்டார். துணை அதிபராக அவரது செயல்பாடுகள் ஒரு பக்கம் அவருக்கு ஆதரவாகவும் ஒரு பக்கம் அவருக்கு அவருக்கு எதிராகவும் மாறி இருக்கிறது. அவரது அனுபவம், செயல்பாடுகள் அவருக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதேநேரம் எதிர்த் தரப்பில் துணை அதிபராக இவரது செயல்பாடுகளே அவருக்கு எதிராக இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications