ஆதரவாளர்களின் ஆரவாரத்தினால் மகிழ்ச்சியடைந்த ட்ரம்ப் - ட்விட்டரில் பாராட்டு
மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆதரவாளர்கள் அனைவரையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.
வாஷிங்டன்: கொரோனா சிகிச்சைக்கு இடையே காரில் வலம் வந்த ட்ரம்ப் ,மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆதரவாளர்கள் அனைவரையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உண்மை என்னவென்றால், அவர்கள் உண்மையில் நம் நாட்டை நேசிக்கிறார்கள் இதற்கு முன்பு இருந்ததை விட நாங்கள் அதை எவ்வாறு சிறப்பாக உருவாக்குகிறோம் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனாவை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்தவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். முக கவசம் போடுவதை கூட கிண்டலாக பேசினார். முக கவசம் அணிவதையும் தவிர்த்து வந்த அவர் தற்போது முக கவசத்துடனேயே வலம் வருகிறார் காரணம் அவரையும் கொரோனா பற்றிக்கொண்டது. அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்த ட்ரம்ப் தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கடந்த 2ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வல்லுநர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ட்ரம்புக்கு தற்போது 74 வயதாகிறது. பொதுவாகவே, கொரோனா வயது முதிர்ந்தவர்களை கடுமையாக தாக்கி வருகிறது. ஆனால், ட்ரம்பின் உடல்நிலையில் பிரச்சினையில்லை எனவும், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் உடல் நிலைப்பற்றி மாறி மாறி ஆளுக்கு ஒரு தகவல் கூறுவதால் ட்ரம்ப் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து விளக்கி டொனால்ட் ட்ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில், தான் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்ப நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், வால்டர் ரீட் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். உலகிலேயே வால்டர் ரீட் சிறந்த மருத்துவமனை எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ட்ரம்ப் பேசியபோது அடுத்த சில நாட்கள்தான் உண்மையான சோதனையாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த இரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். நான் விரைவில் திரும்பிவிடுவேன் என நம்புகிறேன். மீண்டும் பிரச்சாரப் பணிகளை முடிக்க விரும்புகிறேன். உலகம் முழுக்க லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனாவை நாம் வீழ்த்த வேண்டும்.
கட்சி பேதமின்றி அமெரிக்க மக்கள் அனைவரும் எனக்கு தெரிவித்த வாழ்த்துகளுக்கு நன்றி. இது பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
ட்ரம்ப் உடல் நிலை பற்றி மாறி மாறி தகவல்கள் வெளியாகவே அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வாசலில் கவலையுடன் காத்திருந்தனர். இதனையடுத்து திடீரென காரில் வலம் வந்து ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்தார் ட்ரம்ப். அப்போது அங்கிருந்தவர்கள் கொடிகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து மீண்டும் தனது மகிழ்ச்சியையும் ஆதரவாளர்களுக்கு பாராட்டினையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அவர் தனது ட்விட்டர் பதிவில், மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆதரவாளர்கள் அனைவரையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உண்மை என்னவென்றால், அவர்கள் உண்மையில் நம் நாட்டை நேசிக்கிறார்கள், இதற்கு முன்பு இருந்ததை விட நாங்கள் அதை எவ்வாறு சிறப்பாக உருவாக்குகிறோம் என்று காத்திருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications