96 ரூம் இருக்கு! வெறும் 875 ரூபாய்க்கு விலைக்கு வந்த அமெரிக்க ஹோட்டல்.. உண்மை தாங்க! காரணம் தான் செம
வாஷிங்டன்: 96 அறைகளை கொண்ட பிரமாண்ட ஹோட்டல் ஒன்று அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.75 கோடி மதிப்புள்ள இந்த ஹோட்டலின் விலை வெறும் 875 ரூபாய்தானாம். ஹோட்டலில் ஒருநாள் தங்குவதற்கு ஆகும் செலவை விட இதன் மதிப்பு குறைவாக இருந்தாலும் இந்த ஹோட்டலை வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய கண்டிஷனும் உள்ளது. அது என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நல்லதாக ஒரு சட்டை, பேண்ட் எடுக்க வேண்டும் என்றால் கூட தற்போது குறைந்தது ரூ.2000 செலவு ஆகும் இந்த காலத்தில், 96 அறைகளுடன் கூடிய மோட்டல் (சாலையோர ஹோட்டல்) ஒன்று ரூ.875 க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அசல் மதிப்பு ரூ.75 கோடிக்கு மேல் இருக்கும். இவ்வளவு விலை கொண்ட ஹோட்டல் வெறும் 875 ரூபாயா என புருவம் உயர்த்தி படிப்பது தெரிகிறது. எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்குமோ என நினைக்க வேண்டாம்.

உண்மையாகவே 875 ரூபாய்க்குதான் ஹோட்டல் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஹோட்டல் இந்தியாவில் இல்லை. அமெரிக்காவில் இருக்கிறது. சரி இருந்துட்டு போகட்டும். இவ்வளவு விலை குறைவு என்றால் உடனே அமெரிக்கா கிளம்பி போயாவது வாங்கி விடலாம் என பலரும் நினைக்கலாம். ஆனால் அதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது. இவ்வளவு குறைவாக இந்த ஹோட்டல் ஏன் விலைக்கு வந்துள்ளது என்பது பற்றியும் பின்னணியில் உள்ள காரணம் குறித்தும் இங்கே பார்க்கலாம்.
அமெரிக்காவின் கொலோராடோ மாகாணத்தில் டென்வெர் என்ற பகுதியில் மோட்டல் ஒன்று உள்ளது. ஸ்டே இன் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மோட்டலை கடந்த 2023 ஆம் ஆண்டு 9 மில்லியன் கொடுத்து மைல் ஹை சிட்டி என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால் வாங்கிய நாளில் இருந்து அந்த ஹோட்டலுக்கு யாரும் பெரிதாக போகவில்லை. இதனால், அந்த பகுதியில் வசித்து வந்த வீடற்றவர்கள் தங்குவதற்காக இந்த மோட்டலை உரிமையாளர் கொடுத்துள்ளார்.
இங்குள்ள 96 அறைகளிலும் தற்போது வீடு இல்லாதவர்கள் தங்ககியுள்ளனர். இந்த ஹோட்டலை இனி விலைக்கு வாங்குபவர்கள், அதை கொஞ்சம் புதுப்பிக்க வேண்டியுள்ளதாம். புதுப்பிப்பது மட்டும் இன்றி 99 ஆண்டுகளுக்கு வருமானம் குறைந்த மக்கள் தங்குவதற்காக ஒதுக்க வேண்டும். அதாவது வரும் 2,125ஆம் ஆண்டு வரை இந்த வீட்டை ஏழைகள் தங்குவதற்காக கொடுக்க வேண்டுமாம்.
இதற்காகத்தான் இவ்வளவு குறைவான விலைக்கு அந்த நிறுவனம் ஹோட்டலை விற்பனை செய்ய வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் எப்படியும் ஹோட்டல் விலை போய் விடும் என்று நம்பிக்கையை தெரிவித்துள்ளது தற்போது உரிமையாளராக உள்ள நிறுவனம்.
அமெரிக்காவில் டென்வர் மெட்ரோ ஏரியாவில் 2023-2024 ஆண்டு காலத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் நிரந்தரமாக வீடு இல்லாதவர்களாக இருப்பதாகவும் கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications