டிரம்ப்பை சந்தித்த முகேஷ் அம்பானி.. சர்வதேச தலைவர்களுக்கு இணையாக முக்கியத்துவம்! டிரெண்டாகும் போட்டோ
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் நாளை அதிபராகப் பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பல சர்வதேச பிரபலங்கள் பங்கேற்க உள்ள நிலையில், பிரபல தொழிலதிபரும் நாட்டின் மிகப் பெரிய கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி- நீடா அம்பானியும் இதில் பங்கேற்கிறார்கள். இதற்கிடையே டிரம்ப் உடன் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். என்ன தான் தேர்தல் 2024 நவம்பர் மாதமே நடந்தாலும் அந்நாட்டு சட்டப்படி 2025 ஜனவரி 20ம் தேதி தான் அதிபராகப் பதவியேற்க முடியும்.

முகேஷ் அம்பானி:
அதன்படி உள்ளூர் நேரப்படி சரியாக நாளை நண்பகல் 12 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு டிரம்ப் அதிபராகப் பதவியேற்கிறார். இதில் பங்கேற்க உலகெங்கும் இருந்து தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் ஆகியோர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். அதன்படி இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும் டாப் தொழிலதிபருமான முகேஷ் அம்பானியும் இதில் பங்கேற்கிறார்.
இதற்காக அவர் வாஷிங்டன் நகருக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே டிரம்ப் உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி ஆகியோர் எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முக்கியத்துவம்:
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி பதவியேற்பு விழா மட்டுமின்றி, அதைத் தொடர்ந்து நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான அழைப்பு முகேஷ் அம்பானிக்கு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் சர்வதேச தலைவர்களுக்கு இணையாக அம்பானிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது..
போட்டோ:
டின்னரில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவில் முகேஷ் அம்பானி கருப்பு நிற உடையில் இருக்கிறார். அதேநேரம் நீடா அம்பானி ஓவர் கோட் மற்றும் மரகதம் கொண்ட கருப்பு புடவையை அணிந்துள்ளார். டிரம்ப் பதவியேற்பு நிகழ்வில் எடுக்கப்பட்ட போட்டோக்களை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கல்பேஷ் மேத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
நாளை டிரம்ப் அதிபராகப் பதவியேற்கும் சூழலில், இன்றிரவு அங்குச் சிறப்பு டின்னர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதிலும் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி பங்கேற்றுள்ளனர். இந்த பதவியேற்புக்கு முந்தைய விருந்தில், டிரம்புடன் அம்பானி எடுத்த போட்டோக்கள் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
டிரம்ப் பதவியேற்பு:
முதலில் டிரம்பின் பதவியேற்பு விழா நாளைய தினம் திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், வாஷிங்டன் பகுதியில் மிகக் கடுமையான குளிர் நிலவும் நிலையில், பதவியேற்பு விழா உள்ளரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. 1985ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா உள்ளரங்கில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். மேலும், இந்த நிகழ்வில் எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க், சாம் ஆல்ட்மேன், பராக் ஒபாமா, கமலா ஹாரிஸ், ஹிலாரி கிளிண்டன், டிம் குக் மற்றும் சுந்தர் பிச்சை ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications