மும்பை தாக்குதல் சதிகாரன்.. ஹபீஸ் அப்துல் சலாம் புட்டாவி பாகிஸ்தானில் மரணம்.. உறுதிப்படுத்தியது ஐநா
வாஷிங்டன்: லஷ்கர் இ தைபா இயக்கத்தை தொடங்கியவரும் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் அப்துல் சலாம் புட்டாவி உயிரிழந்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையும் உறுதி செய்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. : திடீரென மும்பையில் பல்வேறு இடங்களிலும் இப்படி ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அங்குள்ள பலரும் இந்தியாவில் ஏதோ போர் ஆரம்பித்துவிட்டது என்றே கருதினர்.

அந்தளவுக்கு அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தானில் இருந்து மீன்பிடி படகு மூலம் அவர்கள் மும்பையில் வந்திறங்கினர். மும்பையில் இறங்கியதும் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். தங்கள் கண்களில் பட்ட அனைவரையும் சரமாரியாகச் சுட்டுத்தள்ளினர். அவர்களைச் சமாளிக்க மும்பை சாலைகளில் ராணுவம் இறக்கப்பட்டது.
மும்பை தாக்குதல்: மும்பையில் முக்கிய பகுதிகளில் நான்கு நாட்கள் வரை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டான். அவன் மீது உரிய வழக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவனுக்குக் கடந்த மே 2010 மாதம் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
மே மாதம் உயிரிழந்தார்: அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 2012இல் அவன் தூக்கிலிடப்பட்டான். 166 பேர் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் மொத்த உலகையுமே அதிர வைத்தது. மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தும் வரும் பாகிஸ்தான் அவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்காமல் குற்றச்சாட்டப்பட்டுகிறது.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான சதிவேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும் லஷ்கர் இ தையிபா (LET) என்ற இயக்கத்தை தோற்றுவித்தவருமான ஹபீஸ் அப்துல் சலாம் பட்டாவி மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மே மாதம் உயிரிழந்து விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உறுதிபடுத்தியது ஐநா: பாகிஸ்தான் அரசின் கஸ்டடியில் இருந்த புட்டாவி மரணம் அடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புட்டாவியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், இவருக்கு 16.5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. கடந்த மே மாதமே புட்டாவி மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளி வந்து இருந்த நிலையில், தற்போது ஐக்கிய நாடுகள் பாதுபாக்கு சபையும் இதை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications