நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்.. எவ்வளவு நேரம் நீடிக்கும், எப்படி பார்க்கலாம்.. நாசா தகவல்
வாஷிங்டன்: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் நவம்பர் 19ஆம் தேதி நிகழவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இது சுமார் 3 மணி நேரம் வரை நீட்டிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சூரியன் மற்றும், நிலவுக்கு நடுவே நேர்கோட்டில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழும். அப்போது சூரியனின் ஒளியைப் பூமி முற்றிலுமாக மறைத்துக்கொள்ளும்.
சந்திர கிரகணம் எப்போதும் முழுநிலவு, அதாவது பௌர்ணமி தினத்தில் மட்டுமே நிகழும். அப்போது நிலவு சிவப்பு நிறத்தில் இருக்கும்.

சந்திர கிரகணம்
முழுமையான நிலவு மறைப்பின் போது, நிலவின் மீது விழும் சூரியனின் ஒளியைப் பூமி முற்றிலும் தடுக்கிறது. அப்போது, சூரிய வெளிச்சத்தின் மிகச் சிறிய அளவு பூமியின் வளிமண்டலம் வழியாக ஒளிவிலகல் அடைந்து நிலவின் மீது படுகிறது. மேலும் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள தூசு கதிரவ ஒளியைச் சிதறடிக்கிறது. இதனால் ராலே ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிற ஒளியில் தோற்றமளிக்கும்.

எப்போது
இந்நிலையில், இந்த இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் நவம்பர் 19ஆம் தேதி நிகழவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பொதுவாகச் சந்திர கிரகணங்கள் உலகம் முழுவதும் தெரியாது. அதேபோல இந்த சந்திரன் கிரகணமும் உலகனின் அனைத்து பகுதிகளுக்கும் தெரியாது. நிலவு மேலே இருக்கும் பகுதிகளில் மட்டுமே இந்த சந்திர கிரகணம் தெரியும்.

எங்கே தெரியும்
அதன்படி வரவிருக்கும் சந்திர கிரகணம் வட அமெரிக்க நாடுகளான - அமெரிக்கக் கனடா மற்றும் மெக்சிகோவில் உள்ளவர்களுக்கு முழுமையாகத் தெரியும். இதைக் காண பைனாகுலர்கள் தேவையில்லை. அமெரிக்க நேரப்படி அதிகாலை 2:19 முதல் 5:47 வரை சுமார் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்போருக்கும் இந்த சந்திர கிரகணம் தெரியாது.

இந்தியாவுக்குத் தெரியுமா
அதேபோல இந்த நேரத்தில் ஆசியப் பகுதிகளில் பகல் நேரம் இருக்கும் என்பதால் அந்த நாடுகளில் வசிப்போருக்குச் சந்திர கிரகணம் தெரியாது. இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளில் இந்த சந்திர கிரணம் தெரியாது என்றாலும் கூட இந்த நிகழ்வை நாசா உள்ளிட்ட பலரும் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் உலகெங்கும் உள்ளவர்களும் சந்திர கிரகணத்தன்று சிவப்பு நிறத்தில் ஜோலிக்கும் நிலவை ரசிக்கலாம்.












Click it and Unblock the Notifications