ஓ! சூரிய கிரகணம் சமயத்தில் இது தான் நடக்குமா! கிட்ட சென்ற கொரோனாவை படம் பிடித்த விண்கலம்.. எப்படி??
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள தி பார்க்கர் சோலார் ப்ரோப்பை அனுப்பியுள்ளது. இது சூரிய கிரகணம் சமயத்தில் என்ன நடக்கிறது என்பதைப் படம் பிடித்துள்ளது.
நமது இந்த கேலக்ஸி பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கியது. இது குறித்துத் தெரிந்து கொள்ள நம்மைச் சுற்றியுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை குறித்து நாம் ஆய்வுகளை நடத்தி வருகிறோம்
ஒரு புதிருக்கான விடையைக் கண்டுபிடிப்பதற்குள், புதிதாகப் பல புதிர்கள் தோன்றிவிடுகின்றன. ஆனாலும், இந்த கேலக்ஸி குறித்த கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்ள நாம் தொடர் முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் வருகிறோம்

தி பார்க்கர் சோலார் ப்ரோப்
அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தி பார்க்கர் சோலார் ப்ரோப் (The Parker Solar Probe) விண்ணில் ஏவப்பட்டது. இந்த தி பார்க்கர் சோலார் ப்ரோப் சூரியனின் தன்மை, அதன்படி வெளிப்புறம் குறித்து அருகே சென்று ஆய்வுகளைச் செய்யும். இதற்காக சுமார் 1377 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தைத் தாங்கும் வகையிலான ஷீல்டு இதன் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது,

சூரியனின் கொரோனா
இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் கடந்த ஏப்ரல் மாதம் முதல் முறையாகச் சூரியனின் கொரோனாவுக்குள் நுழைந்தது. என்னது சூரியனுக்கும் கொரோனாவா என்று யாரும் ஷாக் ஆகத் தேவையில்லை. நமது பூமியின் வளிமண்டலத்தை எப்படி ஸ்ட்ரேடோஸ்பியர், ட்ரோபோஸ்பியர் என்று அழைப்பார்களோ, அதுபோலத் தான் சூரியனின் வளிமண்லடத்தை கொரோனா என்று அழைப்பார்கள். சூரியின் இந்த கொரோனா மண்டலத்தை ஆய்வு செய்வதன் மூலம் சூரியன் குறித்த பல முக்கிய புதிர்களுக்கு விடை கிடைக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

என்ன நடக்கிறது
இந்நிலையில், சூரிய கிரகணம் ஏற்படும் போது என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் படம் பிடித்துள்ளது. முழு சூரிய கிரகணம் ஏற்படும் போது, நிலாவானது கொரோனாவை தவிரச் சூரியனின் அனைத்து பகுதிகளையும் மறைத்துக்கொள்வதை பார்க்கர் படம் பிடித்துள்ளது. இந்த கொரோனா பகுதியில் சூரியனில் இருந்து மின்காந்த அலைகளை வெளியே வெடித்துக் கொண்டு செல்கிறது. அதேநேரம் குறிப்பிடத் தகுந்த அளவு மின்காந்த அலைகள் சூரியனின் ஈர்ப்பு சக்தியால் உள்ளே ஈர்க்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

சோலர் ஸ்ட்ரீமர்கள்
சோலர் ஸ்ட்ரீமர்கள் எனப்படும் சூரியனில் இருந்து வெளிவரும் ஆற்றல் கதிர்கள் படம் பிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதுபோன்ற நிகழ்வுகள் கிரகணங்கள் ஏற்படும் போது மட்டுமே நிகழ்கின்றன. இது சூரியனில் இருந்து 10.41 மில்லியன் கிலோமீட்டர் (6.47 மில்லயன் மைல்) தூரத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்டது. ஒப்பீட்டிற்காகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் 149.66 மில்லியன் கிலோமீட்டர் (93 மில்லயன் மைல்) தொலைவில் சூரிய கிரகணத்தைக் காண்கிறோம். இத்துடன் ஒப்பிட்டால், பார்க்கர் மிக அருகில் சென்றே சூரியனைப் படம் பிடித்துள்ளது.

முக்கியம்
இந்த சோலர் ஸ்ட்ரீமர்களை மட்டும் நாம் புரிந்து கொண்டால் சூரியன் குறித்த பல்வேறு புதிர்களுக்கு நம்மால் விடை கண்டுபிடிக்க முடியும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், சூரியனின் மேற்பரப்பை விட, அதன் வளிமண்டலமான கொரோனா அதிக வெப்பமானது. இதற்கான காரணம் இதுவரை நமக்குத் தெரியவில்லை. அதேபோல சூரியனில் இருந்து வெளிவரும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் குறித்தும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள ஆய்வாளர்கள் முயல்கின்றனர். ஏனென்றால், இந்த துகள்கள் நேர்கோட்டில் பயணிக்காமல், ஜிக்ஜேக் முறையில் பயணிக்கிறது.

இது தான் காரணம்
இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் மூலமாகவே சூரியனின் மேற்பரப்பிற்கு இப்படிப்படி ஜிக்ஜேக் சூரிய காற்றை உண்டாக்குவதற்கான ஆற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சூரியன் குறித்த தி பார்க்கர் சோலார் ப்ரோப்-இன் ஆய்வு இத்துடன் முடிந்து போகிவிடவில்லை. இன்னும் சில ஆண்டுகள் தி பார்க்கர் சோலார் ப்ரோப் சூரியனை சுற்றி பல ஆய்வுகளைச் செய்யவுள்ளது. குறிப்பாக, வரும் 2023ஆம் ஆண்டு மிக நெருக்கமாக, அதாவது 6.16 மில்லியன் கிலோமீட்டர் (3.83 மில்லயன் மைல்) அருகே தி பார்க்கர் சோலார் ப்ரோப் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகள் மூலம் சூரியன் குறித்த பல புதிர்களுக்கு நமக்கு விடை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications