ஒரு ஹாய் அனுப்பினால் கூட ரிப்ளை வர 2 நாள் ஆகும்.. 49 ஆண்டுகளாக பயணிக்கும் நாசாவின் வாயேஜர் 1!
வாஷிங்டன்: மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு விண்கலம் பூமியில் இருந்து மிக தொலைவுக்கு சென்றுள்ளது. ஒளியின் வேகத்தில் சென்றால் கூட முழுமையாக ஒரு நாள் பயணத்தில் மட்டுமே அந்த இடத்திற்கு செல்ல முடியும். அந்தளவு தூரத்தை அந்த விண்கலம் எட்டியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி சார்ந்து தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை செய்து வருவது அனைவருக்கும் தெரியும். நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் கடந்த 1977ல் விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 49 ஆண்டுகளாக விண்ணில் பயணித்து வரும் இந்த விண்கலம், நவம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 3.46 மணிக்கு பூமியில் இருந்து சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவை கடந்துள்ளது.

ஒளி நாள்
ஒளி நாள் தொலைவுக்கு இது சென்றுள்ளது. அதாவது ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தாலும் கூட ஒரு நாள் முழுமையாக பயணித்தால் மட்டுமே இந்த இடத்தை அடைய முடியும். ஒளி ஒரு வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அந்த வேகத்தில் 24 மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை வாயேஜர் 1 இப்போது அடைந்துள்ளது.
ஆனால், வாயேஜர் 1 ஒளியின் வேகத்தில் செல்லவில்லை. அது சுமார் 61,000 கிலோமீட்டர் மட்டுமே சென்றுள்ளது. ஆனால், கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் விண்வெளியில் பயணித்ததால் அது இந்த தொலைவை எட்டியுள்ளது. இவ்வளவு தூரம் சென்றுவிட்டதால் நாம் பூமியில் இருந்து அனுப்பும் ரேடியோ சிக்னல் அந்த விண்கலத்தை சென்றடைய சுமார் 24 மணி நேரம் ஆகும். அங்கிருந்து பதில் சிக்னல் பூமிக்குத் திரும்ப மேலும் 24 மணி நேரம் தேவைப்படும். அதாவது ஒரு சாதாரண தகவல் பரிமாற்றத்துக்கே இரண்டு நாட்கள் ஆகும்.
1977ல் தொடங்கிய பயணம்!
வாயேஜர் 1 விண்கலம் 1977 செப்டம்பர் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு 16 நாட்களுக்கு முன்புதான் அதன் இரட்டை விண்கலமான வாயேஜர் 2 ஏவப்பட்டது. சூரியக் குடும்பத்தின் வெளிப்புற கோள்களை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
1979ல் வியாழன் கோளையும், 1980ல் சனிக் கோளையும் கடந்து சென்ற வாயேஜர் 1, அதன் நிலவுகள், வளையங்கள் உள்ளிட்டவை குறித்த முக்கியமான தகவல்களையும் படங்களையும் பூமிக்கு அனுப்பியது. சனியின் நிலவான டைட்டனை நெருங்கி சென்ற பின்னர், அதன் பயண பாதை சூரிய குடும்பத்தின் கோள்கள் அமைந்துள்ள தளத்திலிருந்து விலகி விண்வெளியை நோக்கித் திரும்பியது. 2012 ஆகஸ்ட் மாதம் சூரியனின் துகள்கள் மற்றும் காந்தப்புலங்களால் உருவான பாதுகாப்பு எல்லையான ஹீலியோபாஸைக் கடந்து, விண்வெளிக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்ற பெருமையையும் பெற்றது.

பழமையான தொழில்நுட்பம்
இத்தனை ஆண்டுகளாகியும் வாயேஜர் 1 பூமியுடன் தொடர்பில் இருப்பது வியப்புக்குரியது. இவ்வளவு தூரம் பயணிக்க எரிபொருள் எங்கிருந்து வரும் என்ற கேள்வி வரலாம். இந்த விண்கலத்திற்கு உள்ளே புளூட்டோனியம்-238 உள்ளது. அந்த கதிரியக்கம் மூலம் கிடைக்கும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் கருவிகள் மூலம் இது இயங்குகிறது. ஆனால், காலப்போக்கில் மின்சார உற்பத்தி குறைந்து வருகிறது.
இதனால் மின்சாரத்தை சேமிக்க நாசா விஞ்ஞானிகள் அத்தியாவசியமற்ற அமைப்புகளை படிப்படியாக அணைத்துள்ளனர். 1970களில் உருவாக்கப்பட்ட கம்யூட்டர், ரேம் அமைப்புகளை கொண்டே இந்த விண்கலம் இன்றும் இயங்கி வருகிறது. இந்த இரண்டு வாயேஜர் திட்டங்களையும் 2030களின் நடுப்பகுதி வரை தொடர்ந்து இயக்க முடியும் என நாசா நம்புகிறது. வாயேஜர் 1 தற்போது க்ளீஸ் 445 என்ற நட்சத்திரத்தின் திசையில் பயணிக்கிறது.
கோல்டன் ரெக்கார்டு
மேலும் பூமியின் ஒலி, இசை, வாழ்த்துகள், படங்கள் அடங்கிய 'கோல்டன் ரெக்கார்டு' ஒன்றையும் இந்த விண்கலம் சுமந்து செல்கிறது. வேற்று கிரக உயிரினங்கள் ஒருநாள் இதை கண்டுபிடித்தால், பூமியை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இதை ரெடி செய்துள்ளனர். மனிதர்கள் உருவாக்கிய ஒரு விண்கலம், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக பிரபஞ்சத்தின் அறியப்படாத பகுதிகளை நோக்கி பயணிப்பது அறிவியல் உலகின் மிக பெரிய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
