புதிய கொரோனா பாதிப்பு.. தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் அதிகம்.. WHO வெளியிட்ட ஷாக் தகவல்!
வாஷிங்டன்: தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் புதிய கொரோனா பாதிப்பு விகிதாச்சார அளவில் அதிகம் பதிவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவில் பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த பல மாதங்களாக தொற்று பரவல் இந்தியாவில் கணிசமாக குறைந்து இருக்கிறது.
இதனால், மக்கள் கொரோனாவை கிட்டதட்ட மறந்து விட்டனர் என்று சொல்லும் அளவிற்கு இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது. இடையில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் சற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டு சென்றாலும் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது.

6 மாதங்களில் இல்லாத அளவிற்கு
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன் தினம், 2,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், நேற்றைய ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது. இன்றைய பாதிப்பும் 3 ஆயிரத்தை தாண்டியே இருந்தது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது மக்களை கவலையை அடையவைத்தது. கொரோனா அதிகரிப்பதற்கு புதிய வகை எக்ஸ்பிபி.1.16 வைரஸ்கள்தான் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

முக கவசம் கட்டாயம்
கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் சனிக்கிழமை முதல் அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகள், உடன் வருபவர்கள், மருத்துவர்கள் என அனைவரும் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைச்சகம்
இந்த நிலையில், தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு விகிதாச்சார அடிப்படையில் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில், " பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 வரையிலான உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி தெற்காசியாவிலே இந்தியாவில் தான் விகிதாச்சார அளவில் அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. உலக அளவில் இதே கால காட்டத்தில் 36 லட்சம் புதிய கொரோனா பாதிப்புகளும் 25 ஆயிரம் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
முந்தைய 28 நாட்களை ஒப்பிடும் போது முறையே 27 சதவீதம் மற்றும் 39 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா புதிய பாதிப்பு இறங்குமுகமாக இருந்தாலும் சில நாடுகளில் சமீபத்திய நாட்களில் கொரோனா பாதிப்பு குறிப்பிடத்த அளவில் அதிகரித்து இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. மார்ச் 21 நிலவரபப்டி, உலக அளவில் 761 மில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளும் 6.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவாகியுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக
தெற்காசியாவை பொறுத்தவரை இந்தியாவி்ல் 18,130 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு லட்சத்துக்கு 1.3 என்ற விகிதத்தில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 437 சதவிகிதம் அதிகம் ஆகும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவில் 8,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரு லட்சச்துக்கு 3.1 என புதிய பாதிப்பு பதிவாகியுள்ளது. இது 39 சதவிகிதம் அதிகம் ஆகும்.

27,000 பேர் பாதிப்பு
தெற்காசியாவில் முந்தைய 28 நாட்கள் கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 152 சதவிகிதம் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தரவுகள் கிடைத்துள்ள 11 நாடுகளில் 7 நாடுகளில் 20 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலாக கொரோனா பதிவாகியிருப்பதாக WHO தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications