இந்தியர் நிகில் குப்தாவுக்கு அமெரிக்காவில் 19 ஆண்டுகள் சிறை.. காலிஸ்தானியை கொல்ல சதி வழக்கில் பரபர!
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்காவில் கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் இந்தியரான நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி விக்டர் மரேரோ, இந்த வழக்கில் நிகில் குப்தா மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதாகல் 235 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நமது இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு தடை இருக்கிறது. ஆனால், பல வெளிநாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்திற்கு எந்தவொரு தடையும் இல்லை. இதனால் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அப்படியொரு பயங்கரவாதி தான் குர்பத்வந்த் சிங் பன்னு.

கொல்ல சதி
அப்படி அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றுள்ள குர்பத்வந்த் சிங், இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி ஆவார். இவரை கொல்ல இந்தியரான நிகில் குப்தா சதி திட்டம் திட்டியதாக அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 55 வயதான நிகில் குப்தா, கொலை செய்ய பணம் கொடுத்தது, சதி மற்றும் பணமோசடி ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டிருந்தார். 2023ம் ஆண்டு நியூயார்க்கில் பன்னுனை கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றிருந்தது.
2023ம் ஆண்டு பன்னுனை கொலை செய்வதற்கான சதி திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை வழிநடத்தியதாக விகாஷ் யாதவ் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த நிகில் குப்தா, கொலை செய்ய ஆளை ஏற்பாடு செய்ய உதவக்கூடிய நபர் ஒருவரை அணுகியுள்ளார்.
என்ன நடந்தது!
ஆனால், நிகில் குப்தா தொடர்புகொண்ட அந்த நபர் குற்றவாளி அல்ல. அவர் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வேலை செய்த சீக்ரெட் ஏஜெண்ட் ஆவர்.. அதாவது போலீசிரடமே சென்று பன்னுனை கொல்ல கூலிப்படையை ஆள் தேவை என கேட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்தக் கொலைக்காக 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.84 லட்சம்) கொடுக்க பேசப்பட்டதாகவும், இந்த பணத்தை வழங்க விகாஷ் யாதவ் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக 2023 ஜூன் 9ம் தேதி வாக்கில், நிகில் குப்தாவும் விகாஷ் யாதவும் இணைந்து முன்பணமாக அந்த அமெரிக்க ரகசிய ஏஜெண்டிடம் 15,000 டாலர்களை வழங்க ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்தே நிகில் குப்தா கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
19 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கில் தான் நிகில் குப்தாவுக்கு 235 மாதங்கள், அதவது 19 ஆண்டுகள் ஏழு மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நிகில் குப்தா நீதிமன்றத்துக்கு கடிதம் ஒன்றையும் அளித்திருந்தார். அதில் தனது செயல்களுக்காக வருத்தம் தெரிவித்த அவர், 2023ம் ஆண்டுக்கு திரும்பி சென்று தனது தவறுகளை சரிசெய்ய விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
உருக்கமான கடிதம்
அந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடனான உறவு பாதிக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு நாளும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனது செயல்களால் குடும்பத்தினருக்கும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் ஏற்பட்ட துயரத்துக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கடிதத்தில் எழுதியிருந்தார். மேலும், இந்த கொலை முயற்சியால் யாருக்கும் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என்பதில் தனக்கு மகிழ்ச்சி என்றும், அப்படி ஏதேனும் நடந்திருந்தால் அதுவே தனது வாழ்க்கையின் மிக பெரிய வருத்தமாக இருந்திருக்கும் என்றும் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications
