டிரம்ப் நினைத்தால் கூட முடியாது! வெளிநாட்டினரை வெளியேற்றுவது ஈஸி இல்லை! இடியாப்ப சிக்கலில் அமெரிக்கா
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் உத்தரவைத் தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்தோரை வெளியேற்றும் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. கைவிலங்குடன் ராணுவ விமானத்தில் இவர்கள் நாடுகடத்தப்படும் சூழலில், அது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உண்மையில் டிரம்பால் அனைத்து வெளிநாட்டினரையும் வெளியேற்ற முடியுமா!அங்குள்ள கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்வது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவது அவ்வளவு ஈஸி எல்லாம் இல்லை. அமெரிக்காவில் இப்போது சுமார் ஒரு கோடி பேர் சட்டவிரோதமாகக் குடியேறி, தங்கி வருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் இந்தியர்கள்:
இந்தியர்கள் சுமார் 7 லட்சம் பேர் முறையான ஆவணமில்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி வருகிறார்கள். மத்திய அமெரிக்க நாடுகளான எல் சால்வடார் மற்றும் குவாட்டமாலா நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் இருந்தும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். அதில் தற்போது சுமார் 18,000 இந்தியர்கள் நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர 3000 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சுமார் 20,000 பேர் உடனடியாக நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். அதாவது இந்த 20 ஆயிரம் பேரும் எந்தவொரு விசாரணையும் இல்லாமல் நாடு கடத்தப்படலாம்.
மீதமுள்ள 95% பேர் நாடுகடத்தப்படும் ஆபத்து குறைவு. அவர்கள் கைது செய்யப்பட்டால் மட்டும் நாடு கடத்தப்படும் அபாயம் இருக்கிறது. அதுவும் கூட அமெரிக்காவில் உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரம் அதிகம். எனவே, உள்ளூர் அமைப்புகள் என்ன முடிவெடுக்கிறதோ.. அதை பொறுத்தே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அங்கு ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ள மாகாணங்களில் இதுபோல நாடு கடத்தப்படும் ஆபத்து குறைவாகவே இருக்கும்.
ஈஸி இல்லை:
ஒருவேளை டிரம்பின் உத்தரவை அனைத்து மாகாணங்களும் தீவிரமாகச் செயல்படுத்தினாலும் கூட நாடுகடத்துவது அவ்வளவு ஈஸி இல்லை. தினசரி 3000 நாடு கடத்தப்பட்டாலும் கூட தற்போதுள்ள வெளிநாட்டினரை முழுமையாக நாடுகடத்த சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். நாடுகடத்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அமெரிக்காவிலேயே போதிய அதிகாரிகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், இதுபோல சட்டவிரோதமாகக் குடியேறியவர்களும் கூட அமெரிக்கப் பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளித்தே வருகிறார்கள். விவசாயம், ஹோட்டல் மற்றும் இறைச்சி பிராசஸிங் உள்ளிட்ட துறைகளில் இந்த தொழிலாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர். இந்த ஆவணமற்ற குடியேறியவர்கள் இல்லாமல் போனால் உடனடியாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும். இது விலைவாசி உயர்வை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சியையும் கூட பாதிக்கும். கலிபோர்னியாவில் இதனால் ஏற்கனவே காய்கறிகளின் விலைவாசி அதிகரிக்கத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் பொருளாதாரம்:
இதுபோல சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தான் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிப்பதாகச் சிலர் சொன்னாலும், இந்த தொழிலாளர்கள் இல்லாமல் அமெரிக்கப் பொருளாதாரம் செயல்பட முடியாது என்பதே கசப்பான உண்மை. கடந்த 2008ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது வேலைவாய்ப்பு இல்லாததால் ஆவணமற்ற தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.
அமெரிக்க அரசின் திட்டங்களால் உதவித்தொகை பெற்றே புலம்பெயர்ந்தோர் தங்கி வருவதாக அங்குள்ள வலதுசாரிகள் சொல்லும் நிலையில், கள சூழல் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மேலும், அவர்கள் இல்லாமல் போனால் அது அமெரிக்கர்களுக்குச் சிக்கலையே தருவதாக உள்ளது.
சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள்:
இது ஒரு பக்கம் இருக்க முறைகேடாக நுழைந்தவர்கள் மட்டுமன்றி, ஹெச் 1பி விசாக்களை பெற்று சட்டப்பூர்வமாக நுழைந்தோரையும் வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்காவில் உள்ள தீவிர வலதுசாரிகள் இடையே எழுந்துள்ளது. அமெரிக்காவில் வழங்கப்படும் ஹெச் 1பி விசாக்களில் சுமார் 70% இந்தியர்களுக்குச் செல்லும் நிலையில், அதற்கும் ஆபத்து ஏற்படலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், ஹெச் 1பி விசாக்களை நிறுத்தினாலும் கூட அது அமெரிக்கப் பொருளாதாரத்தையே கடுமையாகப் பாதிக்கும் என்பதால் அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு!
அமெரிக்கப் பொருளாதாரம்:
இப்படி சட்டப்பூர்வமாக நுழைந்தோர், முறைகேடாக நுழைந்தோர் என யாராக இருந்தாலும் ஒரே நேரத்தில் பல லட்சம் பேரை வெளியேற்றுவது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கவே செய்யும். எனவே, டிரம்பின் இந்த நடவடிக்கை தன்னை வலுவான தலைவனாகக் காட்டிக்கொள்ள மட்டுமே இருக்கும். வரும் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கை தொடர வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications