சாக்லேட்டில் ஆபத்தான சால்மோனல்லா பாக்டீரியா.. உணவு பொருளை திரும்ப பெறும் குவாக்கர் ஓட்ஸ் நிறுவனம்
வாஷிங்டன்: சால்மோனல்லா பாக்டீரியா தொற்று அபாயம் இருப்பதால் உணவு பொருட்களை பெப்சிகோ நிறுவனம் திரும்ப பெறுகிறது.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனம் பெப்சிகோ ஆகும். உலக நாடுகளில் பல வகையான குளிர்பானங்கள், உடனே உண்ணக் கூடிய உணவுகளை தயாரித்து வழங்குகிறது பெப்சிகோ (PepsiCo).

இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குவாக்கர் நிறுவனம் ஓட்ஸ் தானியத்தை விற்கிறது. அது போல் சக்தியூட்டும் சாக்லேட் பார் வகை உணவு மற்றும் ஓட்ஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்த உணவுகளை உண்ட 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிற்கு புகார்கள் வந்தன. சால்மோனெல்லா எனும் பாக்டீரியா தொற்று குவாக்கர் தயாரிப்புகளில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த வகை பாக்டீரியாக தொற்று காய்ச்சலையும் குமட்டலையும் வயிற்று வலியையும் கொடுக்கும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு விசாரணை மேற்கொண்டதில் குவாக்கர் தயாரிப்புகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக எதுவும் உறுதியாகவில்லை. எனினும் விற்பனை செய்த புகாருக்கு உள்ளான பொருட்களை அமெரிக்கா மற்றும் கனடா சந்தையிலிருந்து குவாக்கர் ஓட்ஸ் நிறுவனம் திரும்ப பெறுகிறது.
கிரானோலோ பார், கேப் இன் கிரன்ச், கேடோரேட் பீ நட் பட்டர், மன்சீஸ் மிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை குவாக்கர் நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றை வாங்கிவிட்டு இன்னும் பயன்படுத்தாமல் இருப்போர் அந்த பொருளை பயன்படுத்தாமல் குப்பையில் போட்டுவிடுமாறு எஃப்டிஏ தெரிவித்துள்ளது. மேலும் குவாக்கர் ஓட்ஸ், குவாக்கர் இன்ஸ்டன்ட் ஓட்ஸ், குவாக்கர் ஓட் மாவு உள்ளிட்டவை திரும்ப பெறப்படவில்லை.
இந்த பொருட்கள் 50 மாகாணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சால்மோனல்லா பாக்டீரியா ரத்தத்தில் கலந்து விட்டால் குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவில் ஆண்டுதோறும் இந்த பாக்டீரியாவால் 1.3 மில்லியன் பேர் பாதிக்கப்படுகிறார்கள். சராசரியாக 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். 420 பேர் பலியாகிறார்கள்.
இந்த பாக்டீரியா பாதித்த உணவை சாப்பிட்டால் அடுத்த 12 மணி நேரம் முதல் 3 நாட்களுக்குள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி, குமட்டல் ஆகியவை ஏற்படும். இதனால்தான் மேற்கண்ட பொருட்களை குவாக்கர் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. யாராவது மேற்கொண்ட பொருட்களை வைத்திருந்தால் குவாக்கர் மக்கள் தொடர்பு அதிகாரியை காலை 9 மணி முதல் 4.30 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை 1-800-492-9322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் www.QuakersRecallUSA.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications