'ADOBE' சாந்தனு நாராயண் உட்பட 5 முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
வாஷிங்டன்: குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி 'ADOBE' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயண் உள்ளிட்ட 5 உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின் போது முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் எனும் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. சார்க் அமைப்பு போல இது ஒரு சர்வதேச அமைப்பு.

குவாட் உச்சி மாநாடு
குவாட் அமைப்பின் உச்சி மாநாடு இன்று நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சி.இ.ஓக்களுடன் மோடி சந்திப்பு
இதனையடுத்து குவால்காம் (Qualcomm), அடோப் (Adobe), ப்ளாக்ஸ்டோன் குரூப் (Blackstone), ஜெனரல் அடாமிக்ஸ்(General Atomics), ஃபர்ஸ்ட் சோலார் (First Solar) ஆகிய உலகின் 5 முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குவால்கம் தலைமை செயல் Cristiano R Amon-னுடனான சந்திப்பின் போது, டிஜிட்டல் இந்தியா திட்டம், 5 ஜி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது.
Recommended Video

அடோப் சாந்தனு நாராயண்
அடோப் நிறுவன தலைவரான சாந்தனு நாரயணுடனான பிரதமர் மோடியின் சந்திப்பில் டிஜிட்டல் இந்தியா திட்டம், சுகாதாரம், கல்வி மற்றும் மனித வளமேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் அடோப் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பு தொடர்பாக பேசிய சாந்தனு நாராயண், பிரதமர் மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சியளித்தது. புதிய கண்டுபிடிப்புகள், முதலீடுகள் தொடர்பாக விவாதித்தோம். புதிய தொழில்நுட்பங்கள் இதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

மரபுசாரா எரிசக்தி துறையில் முதலீடு
ஃபர்ஸ்ட் சோலார் நிறுவன தலைமை செயல் அதிகாரி Mark Widmar-ஐ பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, சூரிய மின்சக்தியில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி விவரித்தார். மேலும் ஒரே நாடு, ஒரே சூரியன், ஒரே மின்தொகுப்பு குறித்தும் மரபுசாரா எரிசக்தித் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.

டிரோன்கள் உற்பத்தி கேந்திரம்
ஜெனரல் அடாமிக்ஸ் தலைமை செயல் அதிகாரி Vivek Lall-ஐ பிரதமர் மோடி சந்தித்த போது, ராணுவ தளவாட உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நவீனமயமாக்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த Vivek Lall, டிரோன்கள் பயன்பாடு தொடர்பான இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. டிரோன்கள் தயாரிப்பு உகந்த இடமாக இந்தியா திகழும். டிரோன் ஹப் ஒன்றை இந்தியாவில் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். ப்ளாக் ஸ்டோன் தலைமை செயல் அதிகாரி Stephen Schwarzman-னுடனான பிரதமர் மோடி சந்திப்பில், இந்தியாவில் பல்வேறு முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியா பிரதமர் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் சுஹா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.












Click it and Unblock the Notifications