அடங்காத வெளிநாட்டு மோகம்.. வெளியே தூக்கி வீசிய அமெரிக்கா! ரிஸ்க் எடுத்து இந்தியர்கள் செய்த காரியும்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்று நாடு கடத்தப்பட்ட பஞ்சாப் இளைஞர்கள், மீண்டும் வெளிநாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இம்முறை அமெரிக்காவுக்குப் பதிலாக ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.
அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற கனவுடன் நிலத்தை விற்றும், வீடுகளை அடைமானம் வைத்தும், உறவினர்களிடமும் கந்துவட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கியும் பல லட்சம் ரூபாய் செலவழிக்கும் பஞ்சாப் இளைஞர்களின் வாழ்க்கை இப்போது மோசமாகவே இருக்கிறது.

அமெரிக்கா
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்ற இவர்கள் நாடுகடத்தப்பட்டனர். ஆனால், நாடு கடத்தப்பட்ட பிறகும் அவர்கள் வாழ்க்கை பெரிய மாற்றத்தைச் சந்திக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பலர், கடன் சுமையையும் குடும்ப பொறுப்புகளையும் சுமந்துகொண்டு மீண்டும் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுள்ளனர். ஆனால், இம்முறை அவர்களின் இலக்கு ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளாக மாறியுள்ளது.
பஞ்சாபின் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள பாக்ரியன் கிராமத்தை சேர்ந்த மனிந்தர் சிங்கின் கதை இதற்கு ஓர் உதாரணம். 2025 பிப்ரவரி மாதம் அதிகாலை, பஞ்சாப் போலீஸ் வாகனம் ஒன்று கிராமத்தின் குருத்வாரா அருகே வந்து நின்றது. அதிலிருந்து மனிந்தர் உள்ளிட்ட மூவர் இறங்கினர். சுமார் 40 மணி நேர பயணத்துக்கு பிறகு அவர்கள் சொந்த ஊர் திரும்பியிருந்தனர்.
இந்தியர்கள்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களுடன், கைகளிலும் கணுக்கால்களிலும் விலங்கிடப்பட்ட நிலையில் அமெரிக்க ராணுவ விமானத்தில் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். 2025 பிப்ரவரி 5ம் தேதி அந்த விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. மனிந்தர் வீடு திரும்பியபோது, அவர் அமெரிக்கா சென்ற ஜனவரி மாதத்திலிருந்து அவரை பார்க்கவோ, பேசவோ முடியாமல் தவித்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்தனர்.
41 வயதான மனிந்தர், இப்போது பாக்ரியன் அருகே உள்ள ஒரு கிளினிக்கில் மருத்துவரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். தனது மகள்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும்.. கிராமத்தில் வசதியாக வாழும் குடும்பங்களை போல தனது குழந்தைகளுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அவரது கனவு. இதற்காக 2025ல் ரூ.30 லட்சம் கடன் வாங்கி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். ஆனால், மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது எல்லை பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்டார். வீட்டை விட்டு சென்ற ஒரு மாதத்திலேயே நாடு கடத்தப்பட்டு மீண்டும் கிராமத்துக்கு திரும்பினார்.
விவசாயம்
கடன் சுமை குடும்பத்தை அழுத்திய நிலையில், 2025 நவம்பரில் மீண்டும் வெளிநாட்டுக்குப் புறப்பட்டார். இந்த முறை ஸ்பெயினுக்கு சென்ற மனிந்தர், தற்போது பார்சிலோனா அருகே விவசாய தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாராம். அங்கிருந்து விரைவில் பணம் அனுப்ப தொடங்குவதாக மனைவி அமந்தீப் கவுரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஸ்பெயின் பயணத்துக்காகவும் குடும்பத்தின் வீட்டை அடைமானம் வைக்க வேண்டியிருந்தது. தற்போது மனிந்தரின் பெற்றோர் பெறும் முதியோர் ஓய்வூதியம், இலவச ரேஷன் பொருட்கள், மாநில அரசின் பெண்களுக்கான திட்டம் ஆகியவற்றை வைத்தே குடும்பம் வாழ்க்கையை நடத்துகிறது. பட்டதாரியான அமந்தீப்பால் வேலைக்கு செல்லவும் முடியவில்லை. கணவர் வெளிநாட்டில் இருப்பதால் வீட்டு பொறுப்பு முழுவதும் அவர் மீது விழுந்துள்ளது.
என்ன நடந்தது
அதே கிராமத்தை சேர்ந்த சுக்ராஜ் சிங்கும் 2025 பிப்ரவரியில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர். மெக்சிகோ வழியாக சுவர் ஏறி அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது பிடிபட்ட அவர், 20 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதை பற்றி ஊடகங்களிடம் முதலில் பேசியவர்களில் அவரும் ஒருவர்.
ஆனால், அந்த அனுபவம் அவரது வெளிநாட்டு கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. தற்போது அவர் ஸ்பெயினில் தற்காலிக விசாவில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விமானம் மூலம் அவரை அனுப்பியதாகவும், அவர் மாட்ரிட் சென்றடைந்ததாகவும் கூறுகின்றனர்.
மோசமான அனுபவம்
சுக்ராஜின் குடும்பத்துக்கு வெளிநாட்டு பயணங்கள் ஏற்கெனவே பல கசப்பான அனுபவங்களைத் தந்துள்ளன. அவரது தந்தை ஜஸ்பீர் சிங், 2000ம் ஆண்டு ரூ.4 லட்சம் செலவழித்து கிரீஸ் சென்றார். அங்கு விவசாயத் தொழிலாளியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அவர், குறைந்த ஊதியமும் கடுமையான வேலை சூழலும் காரணமாக மன உளைச்சலுடன் நாடு திரும்பினார்.
அவரது மூத்த மகன் குர்ப்ரீத் சிங், 2012ல் ஜெர்மனிக்குச் சென்றார். அவரை அனுப்ப குடும்பம் ரூ.9 லட்சம் செலவிட்டது. அங்கு உணவகத்தில் ஒன்பது ஆண்டுகள் வேலை செய்த அவர், கடனை அடைத்து நிரந்தரக் குடியிருப்புக்காகவும் விண்ணப்பித்தார். ஆனால், ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்த ஜெர்மன் போலீஸார், அவரை விமான நிலையத்துக்கு அழைத்து சென்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். அதற்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை என அவரது தாயார் பல்ஜித் கவுர் கூறுகிறார். தற்போது குர்ப்ரீத் கிராமத்தில் இரண்டு மாடுகளை பராமரித்து பால் விற்பனை செய்து வருகிறார்.
ஐரோப்பா
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களுக்கு ஐரோப்பாவுக்கு செல்வதற்கான ஷெங்கன் விசா பெறுவதற்கு தடை இல்லை என்றாலும், அவர்களது விண்ணப்பம் ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு குறையக்கூடும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதனால் சிலர் சட்டவிரோத வழிகளை தேர்வு செய்யக்கூடும். ஸ்பெயினுக்கு சுற்றுலா விசா ஏற்பாடு செய்ய ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்றும், அமெரிக்கா அல்லது கனடாவுக்கு செல்வதைவிட இது குறைவு என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.. விசாவை நீட்டிப்பதற்கும், வேலை அனுமதி பெறுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், பஞ்சாப் இளைஞர்கள் ஸ்பெயினிலிருந்து போர்ச்சுகல், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் செல்கின்றனர். பாக்ரியன் கிராமத்தில் 2025 பிப்ரவரியில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று பேரும் பின்னர் ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர்.
இது குறித்து பாக்ரியன் கிராமத்தின் சர்பஞ்ச் சரஞ்சித் சிங் கூறுகையில், "குறைந்த கல்வியுடன் நல்ல வாழ்க்கையை தேடும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது கிராமத்தில் நீண்ட காலமாக தொடரும் வழக்கம். பெரும்பாலான இளைஞர்கள் பள்ளி படிப்புக்கு மேல் படிப்பதில்லை. இதனால் உள்ளூரில் நல்ல வேலை கிடைப்பது கடினமாக உள்ளது" என்றார்.
வெளிநாடு செல்வது ஏன்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தர்ஜித் சிங்குக்கு பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் பாதுகாப்பு பணியாளர் வேலை கிடைக்கும் சூழல் இருந்தது. ஆனால், அவர் அதற்கு பதிலாக ஸ்பெயினுக்குச் செல்ல முடிவு செய்தார். அவரது இளைய மகன் தரம்ஜித்தும் அங்கு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
வெளிநாட்டில் மீண்டும் தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் குடும்பங்களுக்கு இருந்தாலும், உள்ளூரில் நிலம் குறைவாக இருப்பது, தனியார் வேலைகளில் குறைந்த சம்பளம், விவசாயத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, போதைப்பொருள் பிரச்சனை ஆகியவை இளைஞர்களை வெளிநாடுகளை நோக்கி தள்ளுவதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அமெரிக்கா நோ.. ஐரோப்பா யெஸ்
2025 ஜனவரி முதல் 2026 ஜூலை வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,800 ஆக உள்ளது. இதில் சிக்கும் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இத்தனை பேர் மாட்டினாலும் கூட பஞ்சாபின் வெளிநாட்டு மோகம் முடிவுக்கு வருவதில்லை. மாறாக அது அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி மாறியுள்ளது.




Click it and Unblock the Notifications
