டிரம்ப் வீட்டை சுற்றி சுற்றி பாதுகாக்கும் ரோபோ நாய்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டிரம்பிற்கான பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது மார் எ லாகோ இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு ரோபா நாயும் கண்காணிப்பில் இறங்கியுள்ளது. இது தொடர்பான போட்டோ, வீடியோ இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தார். கமலா ஹாரிஸை வீழ்த்தி அவர் அமெரிக்காவின் 47வது அதிபராகத் தேர்வாகி இருக்கிறார்.

அடுத்தாண்டு ஜன. 20ம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்பார். ஏற்கனவே கடந்த 2016- 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், 2வது முறையாக அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
டிரம்ப்: வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிரம்ப் வெல்வது உறுதியானது. போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல மாகாணங்களில் டிரம்ப் எளிதாக வெற்றி பெற்றார். டிரம்ப் இந்த முறை மிகச் சிறப்பான பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், அதற்கு கைமேல் பலன் கிடைத்தது தெளிவாகத் தெரிந்தது. டிரம்ப் அடுத்த அதிபராகத் தேர்வானது உறுதியான நிலையில், அவரது இல்லத்தில் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபராகத் தேர்வாகும் நபருக்கு உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும். அந்நாட்டின் சீக்ரெட் சர்வீஸ் மூலமாகவே இந்த பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கிடையே அதிபராகத் தேர்வாகி இருக்கும் டிரம்பின் மார்-எ-லாகோ இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புளோரிடாவில் இருக்கும் இந்த மார்-எ-லாகோ இல்லத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அங்கு 24*7 கண்காணிப்பு பணிகளில் இறங்கியுள்ளனர்.
ரோபோ நாய்: குறிப்பாக ரோபோ நாயும் அங்குக் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மார்-எ-லாகோ இல்லத்தின் காம்பவுண்டு சுவர் அருகே சுற்றிச் சுற்றி வரும் இந்த ரோபா நாய் அங்கு சந்தேகத்திற்கு இடமான பொருள் எதாவது இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. டிரம்ப் இல்லத்தை இந்த ரோபோ நாய் சுற்றி வரும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
என்ன சிறப்பு: டிரம்பின் இல்லத்தைப் பாதுகாக்கும் இது ஆஸ்ட்ரோ என்ற ரோபோ நாய் என்று தெரிகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ரோபோ நாய், தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றதாகும். இந்த ஆஸ்ட்ரோ நாயிற்குள் சீபர்ன் (Seaburn) பேலோட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசாயன மற்றும் பயாலாஜிக்கல் அச்சுறுத்தல்களை எளிதாகக் கண்டறிய முடியும். மேலும், இந்த ரோபோ நாயின் உடலில் இது தெர்மல் கேமராக்கள் மற்றும் 30X ஆப்டிகல் ஜூம் என பல கேமராவும் உள்ளதால் எதுவும் இதன் கண்களில் இருந்து தப்ப முடியாது.
டிரம்ப் கொலை முயற்சி: டிரம்பை பொறுத்தவரைப் பிரச்சாரம் செய்த போதே இரண்டு முறை அவர் மீது கொலை முயற்சிகள் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாகாணத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் துப்பாக்கிக் குண்டு அவரது காதை உரசிச் சென்ற நிலையில், நூலிழையில் அவர் உயிர் தப்பினார்.
தொடர்ந்து கடந்த செப். மாதம் டிரம்பின் கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஊடுருவினார். இப்படி ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சி நடந்துள்ள நிலையில், அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்படுவதை சீக்ரெட் சர்வீஸ் உறுதி செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications