"மூச்சு விடவே முடியல.." கதறி துடித்த கறுப்பினத்தவர்.. காதில் வாங்காத காவலர்கள்..பரிதாபமாக உயிரிழப்பு
வாஷிங்டன்: 2020இல் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்தைப் போலவே மீண்டும் ஒரு பகீர் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இதில் இரு காவலர்களின் மூர்க்கத்தனத்தால் கறுப்பினத்தவர் ஒருவர் மூச்சுவிட முடியாமல் துடிதுடித்துப் பலியானார்.
அமெரிக்காவின் ஓஹியோவில் கார் விபத்து தொடர்பான விசாரணைக்குப் பார் ஒன்றுக்குச் சென்று போலீசார், அங்கிருந்த கறுப்பினத்தவரை விசாரித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஒருவரைக் கீழே தள்ளிய போலீசார், அவரை கட்டுப்படுத்த அவரது முதுகில் காலை வைத்து அழுத்தியுள்ளனர்.

நீண்ட நேரம் இப்படியே கீழே போட்டு அழுத்தியுள்ளனர். இதனால் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது: கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. அப்பகுதியில் கார் விபத்து ஒன்று நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்த பார் ஒன்றுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். அந்த பாரில் இருந்த 53 வயதான ஃபிராங்க் டைசன் என்பவர் இந்த விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து பாரில் இருந்த அவரிடம் போலீசார் செல்கிறார்கள். அப்போது திடீரென இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழவே அந்த கறுப்பினத்தவரைக் கீழே தள்ளி காவலர்கள் அத்துமீறியுள்ளனர். இந்தச் சம்பவம் அனைத்து போலீசார் உடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. அந்தக் காட்சிகள் தான் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
குழப்பம்: அதில் பாரில் நுழையும் போலீசார் அந்த நபரைக் கைது செய்ய முயல்கிறார்கள். அப்போது அந்த கறுப்பினத்தவர், "என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.. உயர் அதிகாரிகளைக் கூப்பிடுங்கள்" என்று கத்துகிறார். அப்போது இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது டைசனை கீழே தள்ளி, அங்கிருந்த ஒரு காவலர் டைசனின் முதுகில் ஒரு முழங்காலைக் கழுத்தின் மிக அருகே வைப்பது அந்த வீடியோவில் தெரிகிறது.
மூச்சு விட முடியல: அப்போது டைசன் வலியால் துடிக்கிறார்.. அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர், "வாயை மூடு.. நீ நன்றாக தான் இருக்கிறாய்" என கத்துகிறார். இருப்பினும் டைசன், "என்னால் மூச்சு விட முடியவில்லை. என்னால் மூச்சு விட முடியவில்லை... கழுத்தில் இருந்து மட்டும் காலை எடுங்கள்" என்று திரும்பத் திரும்ப சொல்வது தெளிவாகக் கேட்கிறது.. இருப்பினும், அந்த காவலர் அதைச் செய்யவே இல்லை.
சில நிமிடம் போலீசிடம் இருந்து தப்பிக்க டைசன் முயன்ற நிலையில், அதன் பிறகு டைசன் அசையாமல் அப்படியே கிடக்கிறார். இதையடுத்து பதற்றமடைந்த போலீசார், அவரை செக் செய்கிறார்கள். இதையடுத்து கைவிலங்கை அவிழ்த்த போலீசார், சிபிஆர் கொடுத்து டைசனை காக்க முயல்கிறார்கள்.

உயிரிழப்பு: இதையடுத்து டைசனை அருகே உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கே அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் கன்டன் காவல் துறை அதிகாரிகள் பியூ ஸ்கோனெக் மற்றும் கேம்டன் புர்ச் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
கடத்தல் மற்றும் திருட்டு வழக்கில் 24 ஆண்டுகள் சிறையிலிருந்த டைசன் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும், விடுதலையாகி சில நாட்களில் இந்த கொடூரம் அவருக்கு நடந்துள்ளது.
ஜார்ஜ் ஃபிலாய்ட்: டைசனுக்கு நேர்ந்த இந்த கொடூரம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2020இல் மினியாபோலிஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்தை நினைவூட்டுகிறது. ஃபிலாய்டின் கொலையின் வீடியோ இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. டெரெக் சாவின் என்ற அதிகாரி ஃபிலாய்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேலாக அழுத்தி இருந்தார். ஃபிலாய்ட் "என்னால் மூச்சுவிட முடியாது" என்று திரும்பத் திரும்பக் கூறி போதிலும் அந்த அதிகாரி கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ வெளியான பிறகு அமெரிக்காவில் மிக பெரியளவில் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications