ஸ்டார்லிங்க் முடங்கினால் உக்ரைன் சரியும்.. ஒட்டுமொத்த நாடும் தனியார் நிறுவனம் கையில்..! கஷ்டம் தான்
வாஷிங்டன்: உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வந்த ஸ்டார்லிங் இணைய சேவை கடந்த வாரம் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையே விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்த ஸ்டார்லிங் சேவையை உக்ரைன் மீறியதாகவும் அதை தடுக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எலான் மஸ்க் தெரிவித்தார். மேலும், ஸ்டார்லிங் சேவை முடங்கினால் உக்ரைன் ராணுவமே சரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் ஆண்டு கணக்கில் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. இதற்கிடையே கடந்த வாரம் போரில் உக்ரைன் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதாவது உக்ரைன் ஸ்டார்லிங் இணையை சேவையை பயன்படுத்தியே தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், அதன் வேகம் முடக்கப்பட்டது.

இணைய சேவை முடக்கம்
இதனால் உக்ரைன் ராணுவத்தால் தாக்குதல் நடத்த முடியாமல் போனது. ஏன் இதுபோல நடந்தது.. இணைய சேவையை முடக்கியது யார் என்பதில் குழப்பம் இருந்தது. இதற்கிடையே ஸ்டார்லிங் தலைவர் எலான் மஸ்க் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை பயன்படுத்தி, உக்ரைன் ராணுவம் விதிமுறைகளை மீறியதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்காக இந்த சேவை பயன்படுத்தப்பட்டதாக கூறிய அவர், அதை தடுக்கும் வகையில் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், உக்ரைனின் பாதுகாப்புக்கு ஸ்டார்லிங்க் மிக முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எலான் மஸ்க்
இது தொடர்பாக எலான் மஸ்க் தனது ட்விட்டரில், "ஸ்டார்லிங்க் என்பது பொதுமக்களுக்கான வணிக ரீதியிலான செயற்கைக்கோள் இணைய சேவை. மனிதர்களை கொல்வதை நோக்கமாக கொண்ட தாக்குதல்களுக்கு இதைப் பயன்படுத்துவது ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், உக்ரைன் ராணுவம் இதை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ட்ரோன்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் சேவை விதிமுறைகளை மீறியுள்ளது. இதை தடுக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.
எலான் மஸ்க் நிறுவனம் ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்ட் என்று இருவேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஸ்டார்லிங்க் என்பது பொதுமக்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனமாகும். ஸ்டார்ஷீல்ட் என்பது ராணுவத்திற்கு இணைய சேவை வழங்கும் பிரிவாகும். ஸ்டார்ஷீல்ட்டை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தியிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. ஆனால், ஸ்டார்லிங்க் மூலம் தாக்குதல் நடத்தினார்கள் என்பதே எலான் மஸ்கின் பிரதான குற்றச்சாட்டு.
உக்ரைன் சரியும்
உக்ரைன் மீது எலான் மஸ்க் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் கூட ,ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஸ்டார்லிங்க் வகிக்கும் முக்கியத்துவத்தையும் எஸான் மஸ்க் சுட்டிக்காட்டினார். ஸ்டார்லிங்க் சேவையை முடக்கினால், உக்ரைனின் ராணுவம் உடனடியாகச் சரிந்துவிடும் என்று அவர் எச்சரித்தார். இது மிரட்டல் அல்ல என்றும் கள நிலவரத்தை சுட்டிக்காட்டும் உண்மை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.
உக்ரைன் பாதுகாத்துள்ளோம்
மேலும், ஸ்டார்லிங்க் சாட்டிலைட் அமைப்பை முடக்குவதோ அல்லது அழிப்பதோ கடினம் என்றும் அவர் கூறினார். போரின் ஆரம்ப கட்டத்தில் ரஷ்ய படைகள் உக்ரைனின் தகவல் தொடர்பு அமைப்புகளை அழித்தபோதும், ஸ்டார்லிங்க் உக்ரைனுக்குப் பெரிதும் உதவியதாக எலான் மஸ்க் தெரிவித்தார். உக்ரைனை பாதுகாப்பதில் உலகின் வேறு எந்த தனியார் நிறுவனத்தையும் விட ஸ்பேஸ்எக்ஸ் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications
