நிலவில் விழுந்து நொறுங்கிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பாகம்? 4 ஆயிரம் கிலோ எடை.. பூமிக்கு ஆபத்து வருமா?
வாஷிங்டன்: கடந்த சில மாதங்களாக விண்வெளியில் கட்டுப்பாடு இன்றி சுற்றிக்கொண்டு இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி நிலவின் மேற்பரப்பில் விழுந்து மோதியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். மணிக்கு 8,700 கிலோமீட்டர் வேகத்தில் நிலவைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்து இருந்ததால், இந்த ராக்கெட் பாகத்தால் நிலவில் மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்ககூடும் என்றும் நம்பப்படுகிறது
பூமியின் ஒரே துணைக்கோளாக உள்ள சந்திரனில் மனிதன் வாழ சாத்தியம் உள்ளதா? தண்ணீர் உள்ளதா என்ற ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. செயற்கை கோள்களை ஏவி நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் தன்மை, அங்குள்ள சூழல்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5 மாடி கட்டிடத்திற்கு நிகரானதாக இருக்கும்
இந்தியா அனுப்பிய விண்கலனும் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. விண்வெளி ஆய்வில் முன்னணி வகிக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயற்கை கோள்களை விண்ணுக்கு ஏவி ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில்தான், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய விண்கலத்தின் பாகம் ஒன்று நிலவில் விழுந்து நொறுங்க உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். பால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பாகம்தான் நிலவில் விழுந்து நொறுங்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
4 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட் பாகம் 5 மாடி கட்டிடத்திற்கு நிகரானதாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்கா - ஜப்பானின் லேண்டர்களை விண்ணுக்கு அனுப்பியது. அப்போது ஈர்ப்பு விசை உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட மாறுதல் உள்ளிட்டவைகளால் இந்த ராக்கெட் பாகம் நிலவில் மேற்பரப்புக்கு சென்று இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கும்
இந்த ராக்கெட் பாகம் ஏற்கனவே நிலவில் மோதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நிலவிலிருந்து பூமிக்கு சிக்னல்கள் திரும்பி வர நேரம் எடுக்கும் என்பதால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. புதன்கிழமையன்று அதிகாலை 2:35 மணி அளவில், மணிக்கு 8,690 கி.மீ வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிலவின் மேற்கு விளிம்பு பகுதியில் உள்ள ஐன்ஸ்டின் பள்ளத்தில் இந்த ராக்கெட் பாகம் மோதியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த பகுதியை பூமியில் இருந்து எளிதாக பார்க்க முடியாது. 4 ஆயிரம் கிலோ எடை கொண்டது என்பதால், இந்த பாகம் மோதியிருக்கும் போது நிலவின் மேற்பரப்பில் தூசுகளும், பெரிய அளவிலான பள்ளமும் ஏற்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட் பாகம் மோதும் போது ஏற்பட்ட தூசுகள் சூரிய ஒளியுடன் இணைந்து பிரகாசமாக மாறியிருக்குமென்றாலும், பூமியில் இருந்து இவற்றை வெறும் கண்ணால் பார்ப்பது கடினமானது ஆகும்.
பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் பாகம் மோதுவதால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? என்ற கேள்வி எழலாம். இது குறித்து நாசா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பூமிக்கு எந்த ஒரு ஆபத்தும் இதனால் ஏற்பட போவது இல்லை. ராக்கெட் பாகம் விழுந்ததால் ஏற்பட்ட தாக்கம் பற்றி நாசா தொடர்ந்து ஆய்வு செய்யும்" என்றார்
எப்படி இது நிகழ்ந்து இருக்கும்?
கடந்த ஜனவரி மாதம் புளோரிடாவில் இருந்து விண்ணுக்கு பால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. சந்திரனுக்கு லேண்டர்களை கொண்டு சென்ற இந்த ராக்கெட்டின் பூஸ்டர் மீண்டும் பூமிக்கு திரும்பக்கூடியவை. ராக்கெட்டின் மேல் பாகம், லேண்டர்களை உந்தித் தள்ள்ள விண்வெளியிலேயே இருக்கும்.
லேண்டர்களை உந்தி தள்ளியபிறகு, மேல் பாகம் பூமியை நோக்கி வரும். வளிமண்டலத்தில் எரிந்து போகும், இல்லையென்றால் கடலில் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுஇருந்தது. ஆனால் அதிக உந்து விசை தேவைப்பட்டதால், ராக்கெட்டின் மேல் பாகம் விண்வெளியிலே மிதந்து கொண்டிருந்தது. ஆனால், ஈர்ப்பு விசை மற்றும் சூரியனின் தாக்கம் போன்றவற்றால் அது நிலவு நோக்கி சென்று இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
