சீன பலூனுக்கும் அலாஸ்கா வானில் தென்பட்ட மர்ம பொருளுக்கும் என்ன வித்தியாசம்?.. வெள்ளை மாளிகை பரபரப்பு
அலாஸ்கா வான்வெளியில் பறந்த மர்ம பொருளுக்கும் சீன பலூனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வான்வழியில் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பொருளுக்கும் கடந்த 6 நாட்களுக்கு முன்பு பறந்து கொண்டிருந்த சீன பலூனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் வான்வெளியில் கடந்த வாரம் வெள்ளை நிறத்தினாலான மர்ம பலூன் பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் இதை சீனா மறுத்தது. இந்த நிலையில் இந்த பலூனானது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஏவுகணை மூலம் சுடப்பட்ட அந்த பலூன் அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்ந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினர் அதை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பலூனின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

பலூன்
இதுவரை கிடைக்கப்பெற்ற பலூனின் சிதறல்களை வைத்து பார்க்கும் போது அது சீனாவின் உளவு பலூன் என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிரச்சிணை பூதாகரமாகியுள்ள நிலையில் தற்போது நேற்றைய தினம் அலாஸ்காவில் ஒரு மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் 40 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு மர்ம பொருள் பறந்து கொண்டிருந்தது.

அமெரிக்க ராணுவம்
அதை அமெரிக்க ராணுவத்தினர் பார்த்தனர். இதையடுத்து அந்த பொருளை போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. சீன உளவு பலூன் குறித்த பரபரப்புக்கு மத்தியில் இந்த மர்ம பொருள் என்னவென தெரியவில்லை. இது குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களை சந்தித்து விளக்கியுள்ளார்.

6 நாட்களுக்கு முன்பு
அவர் கூறுகையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு சுடப்பட்ட சீன உளவு பலூனுக்கும் இந்த மர்ம பொருளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அந்த மர்ம பொருளானது சீன உளவு பலூனை விட சிறியதாக இருந்தது. சிறிய கார் அளவிற்கு அந்த மர்ம பொருள் இருந்தது. அந்த பொருளை யார் அனுப்பினார்கள் என தெரியவில்லை. அதன் நோக்கம் குறித்தும் தெரியவில்லை. அதிக மக்கள் கூடும் இடம் அருகே அந்த பொருள் பறந்து கொண்டிருந்ததால் அதை சுட்டு வீழ்த்தினோம்.

சிதறிய பாகங்கள்
சுடப்பட்ட பொருளின் சிதறிய பாகங்களை சேகரித்து வருகிறோம். அந்த பாகங்கள் தரையில் விழுந்தது மட்டுமல்லாமல் கடலிலும் விழுந்தது. சுடப்பட்ட சீன பலூனை பார்க்கும் போது ஏதோ உளவுக்காக பயன்படுத்தப்பட்டது என எங்களுக்கு தெரியவந்தது. ஆனால் இந்த மர்ம பொருள் அது போன்ற கண்காணிக்க அனுப்பப்பட்டது போல் தெரியவில்லை.

40 ஆயிரம் அடி உயரம்
இந்த மர்ம பொருள் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. அதாவது விமானங்கள் பறக்கும் உயரத்தில்தான் பறந்தது. ஆனால் சீன பலூனோ 65 ஆயிரம் அடி உயரத்திற்கு பறந்தது. மர்ம பொருள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் சீன பலூனோ மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அலாஸ்காவில் பறந்த மர்ம பொருள் வேண்டுமென்றே அனுப்பப்பட்டது போல் தெரியவில்லை. ஏதோ காற்றில் பறந்து வந்தது போல் உள்ளது. ஆனால் சீன பலூனோ வேண்டுமென்றே அனுப்பப்பட்டது. இவ்வாறு ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications