"உங்களுக்கு 4 நாள் தான் டைம்.." உக்ரைனுக்கு பிரஷர் போடும் டிரம்ப்.. ரஷ்யாவுக்கு ஒரே கொண்டாட்டம் தான்
வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தரப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக இப்போது 28 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ள அமெரிக்கா, இதை ஒப்புக் கொள்ள உக்ரைனுக்கு பிரஷர் போட்டு வருகிறது. இது குறித்து வியாழக்கிழமைக்குள் முடிவெடுக்கவும் அழுத்தம் கொடுத்து வருகிறது.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு தரப்பினர் முயன்றுவிட்ட போதிலும் இதுவரை முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த சில மாதங்களாகவே இதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அமெரிக்கா திட்டம்
உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா இப்போது ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இது ரஷ்யாவின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வதாக இருப்பதாகச் சொல்லி உக்ரைன் அதை ஏற்பதில் தயக்கம் காட்டியது. இதற்கிடையே உக்ரைனை அதிபர் டிரம்ப் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்கா இந்தளவுக்கு முயற்சி எடுத்து வரும் சூழலில், உக்ரைன் அதற்கு நன்றி கூட காட்டவில்லை என டிரம்ப் விமர்சித்துள்ளார்.
மேலும், உக்ரைன் மோதல் ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்காவிலும் உக்ரைனிலும் சரியான தலைமை இருந்திருந்தால் அந்த மோதலையே தவிர்த்திருக்கலாம் அல்லது ஆரம்பத்திலேயே நிறுத்தி இருக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். உக்ரைன் மோதலின் போது அமெரிக்க அதிபராக பைடன் இருந்த நிலையில், அவரை விமர்சித்தே டிரம்ப் இந்த கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
ஜெலன்ஸ்கி
அமெரிக்காவுக்கு உக்ரைன் நன்றி கூட சொல்லவில்லை என டிரம்ப் கூறிய சில மணி நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு போஸ்ட்டை பதிவிட்டார். அதில் அவர் அமெரிக்காவுக்கும் அதிபர் டிரம்பிற்கும் நன்றி தெரிவித்திருந்தார். அவர் மேலும், "அமெரிக்காவின் தலைமை முக்கியமானது. பாதுகாப்புக்காக அமெரிக்காவும் அதிபர் டிரம்பும் செய்யும் அனைத்திற்கும் நாங்கள் நன்றியுடன் இருப்போம். நாங்கள் முடிந்தவரை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம்" என்றார்.
இது ஒரு பக்கம் இருக்க.. உக்ரைன் மோதல் தொடர்பான அமெரிக்காவின் வரைவுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்க ஜெனிவாவிவ் அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ஐரோப்பியா அதிகாரிகள் கூடியுள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையிலான அமெரிக்கக் குழு, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்கா சொல்வது என்ன
அமெரிக்காவின் இந்த 28 அம்ச திட்டத்தின்படி உக்ரைன் தனது ராணுவத்தைக் குறைக்க வேண்டும். மேலும், நேட்டோவில் சேரும் முடிவைக் கைவிட வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக உக்ரைன் தனது பகுதியில் ஒன்றான கிழக்கு டான்பாஸ் ரஷ்யாவு்கு விட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஓகே சொல்ல வியாழக்கிழமை வரை உக்ரைனுக்கு டிரம்ப் கெடு விதித்தார். அமெரிக்காவின் இந்த திட்டத்தை ரஷ்யா ஏற்க ரெடி என சொல்லி இருக்கிறது.
இருப்பினும் உக்ரைன் ராணுவம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது கிட்டத்தட்டச் சரணடைவதற்குச் சமம் என எதிர்த்துள்ளது. ரஷ்யாவின் நீண்ட கோலக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவே இந்த அமைதி ஒப்பந்தம் இருப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும் குரல் கொடுத்தன. மேலும், அமெரிக்காவின் திட்டத்திற்குப் பதிலாக ஐரோப்பிய நாடுகளும் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளன.
மாற்றுத் திட்டம்
இது உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது. அதன்படி, பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப முடக்கப்பட்ட ரஷ்யாவின் நிதி பயன்படுத்த வேண்டும். உக்ரைன் தனது பிரதேசத்தை விட்டுக் கொடுப்பது குறித்த பேச்சுவார்த்தை, போர் முடிந்த பிறகு தனியாக நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் ராணுவத்தின் பலத்தை அமெரிக்கா சொல்லும் அளவுக்குக் குறைக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications