சிக்கலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. 2.2 பில்லியன் டாலர் நிதியை .. தடாலடியாக நிறுத்திய டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் பல்வேறு அறிவிப்புகளைத் தாறுமாறாக வெளியிட்டு வருகிறார். அமெரிக்காவை முதன்மையான நாடாக மாற்றவே இந்த அறிவிப்புகளை வெளியிடுவதாக அவர் கூறி வருகிறார். இதற்கிடையே உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான சுமார் $2.2 பில்லியன் மானியங்களை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக நிறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் மீண்டும் அமெரிக்காவைத் தலைசிறந்த நாடாக மாற்றப்போகிறேன் எனச் சொல்லி ஆட்சியை அமைத்தார். அப்போது முதல் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேநேரம் அவர் பிறப்பிக்கும் பல்வேறு உத்தரவுகள் சர்ச்சையிலும் சிக்கி வருகிறது. பேசுபொருளாகவும் மாறி வருகிறது.

ஹார்வர்ட் நிதி நிறுத்திவைப்பு
இதற்கிடையே உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான சுமார் $2.2 பில்லியன் மானியங்களையும் $60 மில்லியன் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாகம் அளித்த லிஸ்டிற்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் பல்கலைக்கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது. மாணவர்கள் அட்மிஷன் தகுதி அடிப்படையில் மட்டுமே நடக்க வேண்டும், பணியமர்த்தல் கொள்கைகளில் மாற்றம், பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மை கொள்கையில் ஆய்வு எனப் பல மாற்றங்களை டிரம்ப் நிர்வாகம் செய்ய வலியுறுத்தியது.
மாஸ்க் கூட அணியக் கூடாது
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களைத் தடுக்கும் வகையில் மாஸ்க் அணியத் தடை விதிக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியது. கடந்த வாரம் அங்குக் காசா போருக்கு ஆதரவாக மிக பெரிய போராட்டம் நடந்தது. அதில் பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கு ஆதரவாகப் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், குற்றச் செயல்கள், வன்முறை அல்லது துன்புறுத்தல்களை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு மாணவர் குழு அல்லது கிளப்பை அங்கீகரிக்க அல்லது நிதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இருப்பினும், இந்த நிபந்தனைகளுக்கு இணங்க ஹார்வர்ட் நிர்வாகம் மறுத்துவிட்டது. டிரம்ப் நிர்வாகத்தின் கடிதத்திற்குக் கடந்த திங்கள்கிழமை ஹார்வர்ட் தலைவர் ஆலன் கார்பர் பதில் எழுதியிருந்தார். அதில் டிரம்பின் கோரிக்கைகள் அமெரிக்க அரசியலமைப்பு உறுதி செய்துள்ள பேச்சு சுதந்திர உரிமைகளை மீறுவதாகவும், இனம், நிறம் அல்லது தேசிய வம்சாவளியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது போல இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஹார்வர்ட் பதில்
அவர் மேலும், "எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி ஒரு தனியார் பல்கலைக்கழகம் என்ன கற்பிக்கலாம், யாரைச் சேர்க்கலாம் மற்றும் எப்படிப் பணியமர்த்தலாம், எந்தெந்த படிப்பு மற்றும் துறைகளைத் தொடரலாம் என்பதை எந்த அரசும் சொல்லக்கூடாது. மேலும் யூத எதிர்ப்புக் கொள்கையைக் கையாள பல்கலைக்கழகம் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது" என்றும் கூறினார்.
நிதியை நிறுத்திய டிரம்ப்
இதையடுத்தே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான சுமார் $2.2 பில்லியன் மானியங்களையும் $60 மில்லியன் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய ஹார்வர்டின் அறிக்கை, நமது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பரவலாகக் காணப்படும் மனநிலையைத் தான் காட்டுவதாக இருக்கிறது. சிவில் உரிமைகள் சட்டங்களை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு பெடரல் நிதி கிடைக்காது.
கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது. யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மக்களின் வரிப் பணத்தை விரும்பினால், பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்திற்குச் செய்ய வேண்டிய நேரம் இது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications