ஹிரோஷிமா & நாகசாகி நினைவிருக்கா? ஈரான் பற்றி டிரம்ப் சொன்ன அந்த வார்த்தை.. ஒரு நொடி ஸ்டன் ஆன உலக நாடுகள்
வாஷிங்டன்: இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. டிரம்ப் வழக்கம் போல அமெரிக்காவுக்கு வெற்றி.. நான் தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தேன் எனச் சொல்லி வருகிறார். இதற்கிடையே உலக வரலாற்றில் மோசமான சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி சம்பவத்தை ஒப்பிட்டு டிரம்ப் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு இரண்டே நாட்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்தன. ஆனால், ஒரு வழியாக இஸ்ரேல் ஈரான் 12 நாள் போர் முடிவுக்கு வந்தது. மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது நான் தான் என வழக்கம் போல டிரம்ப் சொல்லி வருகிறார்.

சர்ச்சை பேச்சு
இது ஒரு பக்கம் இருக்க ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா வீசிய பங்கர் பஸ்டர் பாம்களால் ஈரானின் ஒட்டுமொத்த அணு ஆயுத திட்டமும் அழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது என அமெரிக்க உளவுத்துறையே தனது முதற்கட்ட அறிக்கையில் கூறியிருந்தது. இது குறித்து டிரம்பிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், அதைத் திட்டவட்டமாக நிராகரித்த டிரம்ப், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாகக் கூறினார். அப்போது தான் இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்குதலுடன் டிரம்ப் இதை ஒப்பிட்டார்.
ஹேக்கில் நேட்டோ உச்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், "நான் இதை ஹிரோஷிமா அல்லது நாகசாகியுடன் ஒப்பிட விரும்பவில்லை. ஆனாலும் கேட்பதால் சொல்கிறேன்.. ஆனால் அந்த போர் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதுபோல தான் இந்த தாக்குதல் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது" என்றார்.
டிரம்ப் மறுப்பு
ஈரானின் அணு ஆயுத தளங்கள் பெரியளவில் சேதம் அடையவில்லை என பென்டகன் தகவல் கூறுவதாகச் செய்தியாளர்கள் கேட்டதும் டிரம்ப் டென்ஷன் ஆகிவிட்டார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில், "சில செய்தி நிறுவனங்கள் வேண்டும் என்றே போலி செய்திகளை வெளியிடுகின்றன. வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றைக் குறைத்து மதிப்பிட முயல்கிறார்கள். உண்மையில் ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அணுகுண்டுகள்
1945 ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கப் படைகள் அணுகுண்டுகளை வீசின. போரின் போது முதல்முறையாக அணுகுண்டுகள் வீசப்பட்டது அப்போது தான்.. கடைசி முறையும் அவை தான். அந்தளவுக்குப் பேரழிவை ஏற்படுத்துவதாக அணு குண்டு தாக்குதல் அமைந்தது.
1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமாவில் வீசப்பட்ட "லிட்டில் பாய்" அணுகுண்டு காரணமாக 1.4 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகசாகியில் வீசப்பட்ட "ஃபேட் மேன்" என்ற இரண்டாவது குண்டு காரணமாக சுமார் 70,000 பேர் உயிரிழந்தனர். இந்த அணு குண்டு தாக்குதலால் இரண்டு நகரங்களும் முற்றிலும் அழிந்து போயின. குண்டு வெடித்ததில் உயிரிழப்பு ஒரு பக்கம் என்றால் கதிர்வீச்சு பாதிப்பாலும் உயிரிழந்தனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த அணுகுண்டு தாக்குதல் ஜப்பானைச் சரணடை வைத்தது. அதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
பேசுபொருள்
அதேநேரம் அணுகுண்டுகளின் பேரழிவை உலகம் அப்போது தான் உணர்ந்தது. அந்த தாக்குதலில் இருந்து மீண்டு வரவே ஜப்பானுக்குப் பல காலம் ஆனது. மேலும், சில பாதிப்புகள் தலைமுறை கடந்தும் கூட தொடர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு மோசமான ஒரு சம்பவத்தை டிரம்ப் உதாரணமாக ஒப்பிட்டுள்ளது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications