புதினுடன் கைகுலுக்கும்போது டிரம்ப் நடத்தையில் மாற்றம்.. கவனிச்சீங்களா! அர்த்தம் இதுதானாம்!
வாஷிங்டன்: உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் அலாஸ்காவில் சந்தித்து உரையாடினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பில் நுழைவதற்கு முன்னர் இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர். இதில் டிரம்ப்பின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்திருக்கிறது.
உக்ரைன் ரஷ்யாவின் பக்கத்து நாடு. ஒரு காலத்தில் உக்ரைன், சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. சோவியத் உடைந்த பின்னர் தனி நாடாக மாறியது. இப்போது இது அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயற்சிப்பதே ரஷ்யா-உக்ரைன் போருக்கான காரணம்.

தேவதூதன் டிரம்ப்
உலகத்தில் போரை தடுக்க வந்த தேவதூதன் நானே! என்று சொல்லிக்கொண்டு உலா வரும் டிரம்ப், உக்ரைன் போரை பார்த்து சும்மா இருப்பாரா? எனவே சட்டென தனது விமானத்தை எடுத்துக்கொண்டு அலாஸ்கா கிளம்பிவிட்டார். அங்கு புதினை வரசொல்லி போர் குறித்து பேசினார். போன வேகத்தை பார்த்தால், போரை நிறுத்தி விட்டுதான் திரும்புவார் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பேசிக்கொண்டன. கைப்புள்ள கிளம்பிட்டான்.. என்கிற கதையாக பேசப்பட்ட இந்த விஷயம் கடைசியில் புஸ்ஸென ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.
அதாவது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. போரை நிறுத்த ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை. அப்புறம் என்ன? விமானத்தை கிளப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறார் தேவதூதன்.
பேச்சுவார்த்தையில் தோல்வி
அதற்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்குள் நுழையும் முன்னர் இரு தரப்பினரும் கை குலுக்கிக்கொள்வது வழக்கம்தான். அந்த வகையில் புதினும் டிரம்ப்பும் கைகுலுக்கி உள்ளனர். இதில் கூட அரசியல் இருக்கிறது என உடலமைப்பு மொழி நிபுணர் பாட்டி அன் வூட் கூறியிருக்கிறார். அதாவது புடினை மிகவும் சக்தி வாய்ந்தவராக டிரம்ப் கருதுகிறார், அதற்கேற்றார் போலத்தான் டிரம்ப்பின் உடல் மொழி இருந்தது என கூறியிருக்கிறார்.
உடல்மொழி சொல்லும் அரசியல்
ட்ரம்பின் கையை உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும்படி அவர் வைத்தார். இதனால் புடின் தனது உள்ளங்கையை அதன் மேல் வைக்க முடிந்தது. இது புடினை மிகவும் வலிமை வாய்ந்தவராக டிரம்ப் ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. இந்த கைகுலுக்கலில் மரியாதை, கட்டுப்பாடு மற்றும் நெருக்கம் ஆகிய மூன்றும் கலந்திருந்தது. டிரம்ப் புதினை எதிர்பார்த்து காத்திருந்தபோது, அவர் சிரித்தார். இது அவர் நிம்மதியாகவும், நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்ததாகவும் காட்டுவதாக இருந்தது.
அவரது சிரிப்பு இயல்பானதாகவும், மென்மையாகவும் இருந்தது. அவரது தோள்கள் வழக்கத்தை விடப் பின்னோக்கி இருந்தன. இது அவரது நம்பிக்கையைக் காட்டுவதாகவும், அவரது உடல் நிலை அசாதாரணமாக நேராக இருந்ததாகவும் உடலமைப்பு மொழி நிபுணர் பாட்டி அன் வூட் கூறியுள்ளார்.
அடிபணிந்த டிரம்ப்
புடின் நெருங்கியபோது, டிரம்ப் மெதுவாக கைதட்டி மரியாதை செலுத்தினார். பின்னர் டிரம்ப் ஒரு படி முன்னால் வந்தார். பொதுவாக டிரம்ப் தனது கையை மேல்நிலையில் வைத்திருக்க விரும்புவார். ஆனால் இங்கு அவர் தனது உள்ளங்கையை மேல்நோக்கி வைத்து, ஒரு பலவீனமான அல்லது அடிபணிந்த நிலையை வெளிப்படுத்தினார். இது புடினை மிகவும் சக்திவாய்ந்தவராக டிரம்ப் கருதுவதைக் காட்டுகிறது என்று பாட்டி அன் வூட் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தனது கையசைவை தனது உடலின் நடுப்பகுதிக்கு நெருக்கமாக வைத்துக் கொண்டு மற்றவரை இழுக்கும் ட்ரம்பின் தனித்துவமான பாணியை அவர் பயன்படுத்தினார். இது ஒருவித அதிகார வெளிப்பாடுதான். டிரம்ப் மற்றும் புடின் இருவரும் கண்களைப் பார்த்தவாறு சிரித்துக் கொண்டனர். இது அன்பு மற்றும் மரியாதை, உறுதியுடன் கூடிய சமநிலையைக் காட்டியது. அவர்களின் தலைகள் நெருக்கமாக இருந்ததும் கவனிக்கப்பட்டது.
புதினின் உடல்மொழி
புடினின் உடலமைப்பு மொழி எந்தவிதமான நோக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை. டொனால்ட் டிரம்பின் காரில் இருந்து புடின் வெளியே வந்தபோது சிரித்தபடியே இருந்தார். டிரம்ப் மற்றும் புடின் இருவரும் சிலமுறை புன்னகைத்துக் கொண்டனர். புடின் தனது மனநிலையை தனது உடல்மொழியால் வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள், புடின் பேசும்போது நாற்காலியில் சாய்ந்து உட்காரும் அவரது வழக்கத்தை கொண்டிருந்தனர். இது அவர்களது ஆர்வமின்மையைக் காட்டியது.
ஆனால் அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையில் டிரம்ப் சாய்ந்து உட்காரவில்லை. மாறாக, கூட்டம் தொடங்கியதும் அவர் தனது நாற்காலியில் முன்நோக்கி அமர்ந்திருந்தார். அவரது கைகள் கோர்க்கப்பட்டிருந்தன" என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications