திடீரென அமெரிக்காவை பாராட்டிய புதின்.. உலக அரசியல் மாறுதே! அந்த பக்கம் டிரம்ப் பேச்சிலும் மாற்றம்
வாஷிங்டன்: டிரம்ப் புதின் (Trump Putin Meeting) இடையே இன்று முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்தியா மீதான வரியே புதினை பேச்சுவார்த்தைக்கு வரவழைத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். அதேபோல ரஷ்ய அதிபர் புதினும் திடீரென தனது டோனை மாற்றி டிரம்ப்பை பாராட்டியிருக்கிறார். சர்வதேச அரசியலில் இது முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் போர் தொடர்பாக இன்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிபர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் போர் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியா மீதான வரி விதிப்பே புதினை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் பேச்சு
இந்தியா மீதான அமெரிக்காவின் வரிகள் ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்குவதிலிருந்து இந்தியாவைத் தடுத்தது என்றும் இதுவே ரஷ்யாவைப் பேச்சுவார்த்தைக்கு வர வைத்ததில் முக்கிய பங்கு வகித்தாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "இந்தச் சந்திப்பில் புதின் ஒரு ஒப்பந்தத்தைச் செய்வார் நம்புகிறேன். அவர் ஒரு டீல் செய்யப் போகிறார். நாங்கள் ஒரு டீலை போடுவோம். இது சீக்கிரம் முடியப் போகிறது" என்றார். ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும் வரிகளும் புதினை பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்க வைத்ததா என்ற கேள்விக்கு "எல்லாவற்றிற்கும் ஒரு தாக்கம் உண்டு" என்று பதிலளித்தார்.
ரஷ்ய கச்சா எண்ணெய்
மேலும் அவர், "இந்தியா மீதான வரிகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதிலிருந்து அவர்களைத் தடுத்தது. நிச்சயமாக, நீங்கள் உங்கள் இரண்டாவது பெரிய வாடிக்கையாளரை இழந்துள்ளீர்கள். முதல் பெரிய வாடிக்கையாளரையும் இழக்கும் ஆபத்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும்போது பேச்சுவார்த்தைக்கு வருவீர்கள். அதை தான் ரஷ்யா செய்கிறது. வரிகளுக்கு ஒரு பங்கு வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு எதாவது பொருளாதாரச் சலுகைகள் வழங்கப்படுமா என்று கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாகப் பொதுவெளியில் இப்போது எதுவும் சொல்ல முடியாது என மட்டும் கூறினார். ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் மிகப் பெரியவை என்ற டிரம்ப், இருப்பினும் உக்ரைன் போர் தான் இப்போது முன்னுரிமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜெலன்ஸ்கி உடன் மீட்டிங்
பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடந்தால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை மீண்டும் சந்திக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார். அலாஸ்காவிலேயே ஜெலன்ஸ்கியை அழைத்து அங்கேயே சந்திக்கும் திட்டமும் இருப்பதாகப் பிரதமர் மோடி கூறினார். அவர் மேலும் கூறுகையில், "இந்தச் சந்திப்பு மோசமாகப் போனால் நிச்சயம் அதற்குப் பிறகு எதுவும் நடக்காது. நான் வீட்டிற்குச் சென்றுவிடுவேன். ஆனால் திட்டமிட்டபடி சந்திப்பு நடந்தால் நான் அதிபர் ஜெலன்ஸ்கியையும் ஐரோப்பிய தலைவர்களையும் அழைக்கப் போகிறேன்" என்று டிரம்ப் கூறினார்.
மேலும், இந்த முதல் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால் அடுத்து தனக்கும், புதினுக்கும், ஜெலன்ஸ்கிக்கும் இடையே சந்திப்பு நடக்கும் என்றும் அதில் எல்லைப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் புதின் தெரிவித்தார். இந்த இரண்டாவது சந்திப்பு மிக மிக முக்கியமானது என்றும் அதில் தான் ஒரு ஒப்பந்தம் போடப்படும் என்றும் டிரம்ப் கூறினார். இருப்பினும், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக இருக்க 25% வாய்ப்பு மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்
டோனை மாற்றிய புதின்
மற்றொருபுறம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய புதின், டிரம்பை திடீரெனப் பாராட்டினார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சியைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக புதின் மேலும், "இப்போது இருக்கும் அமெரிக்க நிர்வாகம்... சண்டையை நிறுத்தவும், நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரவும் முயல்கிறது. இந்த மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற முடிவை அடைய நேர்மையான முயற்சிகளை எடுத்து வருகிறது" என்றார்.
அலாஸ்கா பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா ரஷ்யா இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டுத் தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகலாம் என்பது போலவும் புதின் கருத்து கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications