டிரம்ப் - புதின் சந்திப்புக்கு அலாஸ்கா தேர்வு செய்யப்பட்டது ஏன்? பின்னணியில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா?
வாஷிங்டன்: வரும் 15 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் (Trump Putin meet) இடையே அலஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையை உலகமே உற்று நோக்கி வருகிறது. புதினுக்கும் டிரம்புக்கும் இடையே நடைபெற இருக்கும் இந்த பேச்சுவார்த்தைக்கான இடமாக அலஸ்கா தேர்வு செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆயுத உதவி மற்றும் நிதி உதவி அளிப்பதால், ரஷ்யாவுக்கு உக்ரைன் கடும் சவால் அளித்து வருகிறது.

உக்ரைன் ரஷ்யா போர்
இதனால், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு மணி நேரத்தில் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவேன் எனப் பேசியிருந்தார்.
ஆனால் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் போரை நிறுத்த முடியவில்லை. இதனால், புதினை கடுமையாக விமர்சித்து வருகிறார் டிரம்ப். அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வர ரஷ்யாவுக்கு டிரம்ப் நேற்று வரை கெடு விதித்திருந்த நிலையில் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்யாவுக்கு சென்று அதிபர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, டிரம்ப் - புதின் அடுத்த வாரம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
டிரம்ப் - புதின் சந்திப்பு
இந்த நிலையில் டிரம்ப் - புதின் இடையேயான சந்திப்பு வருகிற 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:- எனக்கும், புதினுக்கும் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு வருகிற 15- ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.
அலஸ்காவை தேர்வு செய்தது ஏன்?
மேலும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான ஒரு இறுதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப் - புதின் சந்திப்பை ரஷ்யாவும் உறுதிப்படுத்தியது. கடந்த மாதம் துருக்கியில் ரஷியா - உக்ரைன் இடையே நடந்த நேரடி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் டிரம்ப் - புதின் இடையேயான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து உள்ளது.
இதில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே, ரஷியாவும் அமெரிக்காவுக்கும் இடையே எல்லைப்பகுதியான மகாணமாக உள்ள அலஸ்காவில் இந்த சந்திப்பு நடைபெற இருப்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அலஸ்காவை பொறுத்தவரை புவியியல் ரீதியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு மத்தியில் இந்த இடம் அமைந்துள்ளது. ரஷ்யவின் கிழக்கு எல்லைக்கும் அமெரிக்காவின் மேற்கு எல்லைக்கும் இடையில் இந்த அலஸ்கா உள்ளது.
சமநிலையான ஒரு இடம்
இதனால், இரு தலைவர்களுக்கும் இடையே பயண வசதியாவும் ஒரு பொதுவான இடமாகவும் அமைந்து இருக்கிறது. அடுத்தபடியாக அலஸ்கா எந்த ஒரு நாட்டின் தலைநகரில் இல்லாத நகரம். இதனால் அரசியல் பாகுபடற்ற நடுநிலை இடமாக இது பார்க்கப்படுகிறது. எனவே, யாரும் ஆதிக்கம் செலுத்தவில்லை. சமநிலையான ஒரு இடம் என்று சொல்லும் வகையில் இந்த இடம் அமைந்து இருக்கிறது.
பனிபோர் காலத்தில் அமெரிக்கா - ரஷ்யா இடையே புவியியல் நெருக்கத்தை சுட்டிக்கட்டும் பகுதியாக அலஸ்கா இருந்தது. தற்போது அலஸ்காவில் சமாதான பேச்சு நடப்பது உலக அரங்கில் மிக முக்கிய மொத்தத்தில் பயண எளிமை, நடுநிலைமை சூழல், பாதுகாப்பு மற்றும் சர்வதேச சின்னம் என உள்ளிட்ட காரணிகளே அலஸ்காவை தேர்வு செய்ததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
மற்றொரு காரணம் இது தான்
இது மட்டும் இன்றி மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. எனவே சர்வதேச கிரிமினல் நீதிமன்ற உறுப்பு நாடுகளாக இருக்க கூடிய பகுதிக்கு புதின் சென்றால் அவர் கைது செய்யப்படலாம். எனவே இத்தகைய சட்ட சிக்கல்களை தவிர்க்கும் வகையிலும் அலஸ்காவை புதின் டிக் அடித்து இருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications