பேட்டை ரவுடி போல் நடந்து கொண்ட டிரம்ப்.. பதவிக்கு சற்றும் பொருந்தாத செயல்.. பறிபோகும் மானம்
வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டோம் என்பதை சற்று ஏற்காத டிரம்ப் ஒரு பேட்டை ரவுடியை போல நாடாளுமன்றத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது அவரது பதவிக்கு சற்றும் பொருந்தாத செயல்.
பதவியேற்றது முதல் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தவர் டிரம்ப். இந்தியர்களுக்கு விசா பிரச்சினை தொடங்கி அன்னிய நாட்டினருக்கு அமெரிக்காவில் வேலைக்கு எதிர்ப்பு என அனைத்திலும் சர்ச்சைதான்.
இத்தகைய டிரம்ப் தற்போது பதவி போதையால் வன்முறையை அரங்கேற்றும் அளவுக்கு எல்லை மீறி சென்று விட்டார் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் காமெடி பீஸாக இருந்த டிரம்ப் போக போக இனவெறி, பதவி வெறி என வெறித்தனமாக செயல்பட்டதன் விளைவு 4 உயிர்கள் பறிபோனது.

அமெரிக்க அதிகாரிகள்
ஏற்கெனவே கொரோனா தொற்றால் அமெரிக்கா பாதித்த போது சுகாதாரத் துறை அதிகாரிகள் லாக்டவுனை அமல்படுத்த கூறிய போது பொருளாதாரம் பாதித்துவிடும் என்பதற்காக அந்த ஆலோசனையை மறுத்துவிட்டார். நாட்டு மக்கள் கொரோனாவால் செத்து கொண்டிருந்த போது உடலில் சானிடைசர்களை ஏற்றிக் கொள்ளலாம் என்றார்.

இந்திய பிரதமர்
மேலும் அக சிவப்பு கதிர்களை உடலில் செலுத்தலாம் என்று கூறி மருத்துவ நிபுணர்களையே அதிர வைத்தார். வைரஸை கொல்ல கிருமிநாசினியோ, கதிர்வீச்சையோ வெப்பத்தையோ உடலில் ஏற்றலாம் என்றும் கூறி தனக்கே உரிய பாணியில் சிரித்தார். பின்னர் தான் விளையாட்டுக்காக இதை கூறியதாக சமாளித்தார். கொரோனாவை தடுக்க ஹைட்ரோகுளோரோகுயின் எனும் மருந்தை விற்பனை செய்யுமாறு டிரம்ப் இந்திய பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்டார். இந்த மருந்தை தரவில்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

ஏற்றுமதி
பின்னர் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தவுடன் இந்தியாவின் உதவியை ஒரு போதும் மறக்க மாட்டேன் என கூறினார். ஆனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என அமெரிக்கா உலகநாடுகளில் முதலிடம் வகிப்பதாக விமர்சனம் எழுந்ததை அடுத்து இந்தியாவில் கொரோனா குறித்த கணக்கை குறைத்து காட்டுகிறார்கள் என நா கூசாமல் தனது இயலாமையை ஆதரித்தார்.

உயிர் பலி
இந்த சின்ன வைரஸை அனுப்பியது சீனாதான். ஒரு வேளை இத்தனை உயிர் பலிக்கு காரணமாக கொரோனாவை அவர்கள் வேண்டுமென்றே அனுப்பியிருந்தால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றார். பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது ஜோ பிடனுடனான விவாதத்தில் மாஸ்க் அணியாமல் வந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

விலக மாட்டேன்
இத்தகைய முரண்பாடுகளின் மொத்த உருவமான டிரம்ப், கொஞ்சம் கூட நியாயமே இல்லாத, தோல்வியை ஏற்க மறத்து, நீதிமன்றம் நீதிமன்றமாக வெறுங்கையை வீசிக் கொண்டு சென்று நீதிபதிகள் ஆதாரம் எங்கே என கேட்டு முகத்தில் கரி பூசி அனுப்பிய போதும் தான் தோல்வி அடைந்ததை டிரம்ப் சற்று உணராமல் அதிபர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என கிறுக்குத்தனமாக கூறிவந்தார்.

ஜோ பிடன் வெற்றி
டிரம்பின் கொட்டத்தை அடக்க இன்றைய தினம் ஜோ பிடன் வெற்றியை அறிவிக்க இருந்த நாடாளுமன்றத்தில் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வன்முறையை நடத்தினார். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. அதிபர் பதவிக்கு சற்றும் பொருந்தாத காரியத்தை செய்ததாக உலக அரங்கில் மானம் போனது. அமெரிக்கா என்றாலே முதலாளித்துவ நாடு, வல்லரசு நாடு என கெத்தாக இருந்த நிலையில் டிரம்பின் செயலால் சிறிய நாடுகள் கூட பார்த்து சிரிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார் டிரம்ப்.












Click it and Unblock the Notifications