"H-1B விசா & அமெரிக்க குடியுரிமை!" ஆப்பு வைக்கும் டிரம்ப்.. இந்தியர்களுக்கு தான் பெரிய பிரச்சனையாம்!
வாஷிங்டன்: டிரம்ப் காலத்தில் அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்குச் சிக்கல் தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹெச் 1 பி விசா தேர்வு முறை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை தேர்வு முறையை டிரம்ப் மாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்குப் பெரிய சிக்கலைத் தரலாம் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப் முதலில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்தார். அவர்களைக் கைது செய்து நாடு கடத்தவும் செய்தார். ஆனால், அத்துடன் அவர் நிற்கவில்லை. தொடர்ந்து சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். மேலும், அமெரிக்காவுக்கு வேலைக்காகச் செல்வதையே கடினமானதாக மாற்றி வருகிறார்.

டிரம்ப் நிர்வாகம்
இது தொடர்பாக அவரது நடவடிக்கைகள் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், டிரம்ப் அதையெல்லாம் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் அடுத்து எச்-1பி விசாவில் மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இது குறித்து ஆலோசனைகள் நடந்து வந்த போதிலும், யாரும் இது குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனால், இப்போது அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவையின் (USCIS) புதிய இயக்குநர் ஜோசப் எட்லோ இது தொடர்பாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். சட்டப்பூர்வ குடியேற்ற முறையை நவீனமயமாக்கும் முயற்சியாக சில மாற்றங்களைச் செய்யவுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
ஹெச் 1பி விசா
இது தொடர்பாகப் பிரபல அமெரிக்க ஊடகத்திற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "ஹெச்-1பி விசா சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரம், அமெரிக்க வணிகங்கள் மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையிலேயே ஹெச்-1பி விசா இருக்க வேண்டும். மாறாக அமெரிக்க ஊழியர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க இதைப் பயன்படுத்தக்கூடாது" என்று கூறியிருந்தார்.
டிரம்ப் நிர்வாகம் சட்டப்பூர்வ குடியேற்ற முறையை மேம்படுத்தும் அல்லது நவீனமயமாக்கும் திட்டங்கள் குறித்து எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்காமல் இருந்தது. சட்டவிரோதமாகத் தங்கியிருப்போர், சிறு விதிகளை மீறுவோரை நாடுகடத்துவதிலேயே இத்தனை காலம் அந்நாட்டுக் குடியேற்ற துறை ஆர்வம் காட்டி வந்தது. இந்தச் சூழலில், எட்லோவின் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
விசா தேர்வு முறை
இதுநாள் வரை ஹெச் 1பி விசா லாட்டரி முறையிலேயே தேர்வு செய்யப்பட்டது. அதாவது ஆண்டுக்கு 85,000 பேருக்கு ஹெச் 1பி விசா வழங்கப்படும் நிலையில், வெளிநாட்டினர் இதற்காக விண்ணப்பிப்பார்கள். கணினி ஒன்று லாட்டரி முறையில் 85,000 பேரைத் தேர்வு செய்யும். இதுபோல லாட்டரி முறையில் தேர்வு செய்வதை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்தே வந்திருக்கிறார். எனவே, அதற்குப் பதிலாகத் திறன் மற்றும் ஊதியத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கேற்ப விசா வழங்கும் முறையைக் கொண்டு வர டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்க சிட்டிசன்ஷிப் தேர்வு
அதேபோல குடியுரிமை, அதாவது அமெரிக்க சிட்டிசன்ஷிப் தேர்விலும் மாற்றம் வர இருக்கிறது. அமெரிக்காவின் தற்போதைய குடியுரிமைத் தேர்வு கடினமானதாக இல்லை என்றும் ஈஸியாக மனப்பாடம் செய்து இந்த தேர்வை பாஸ் செய்ய முடிவதாக எட்லோ கூறினார்.
2008 வரை இந்தத் தேர்வு பெரும்பாலும் முறையானதாக இருக்காது. இஷ்டத்திற்குக் கேள்விகள் இருக்கும். புஷ் நிர்வாகம் இதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. குடிமைத் தேர்வை அறிமுகப்படுத்தியது. இதில் மொத்தம் 100 கேள்விகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு 10 கேள்விக்கும் 6க்கு சரியான பதிலளிக்க வேண்டும் என்று கூறியது. டிரம்ப்பின் 2016-2020 ஆட்சிக் காலத்தில் 128 ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும், பைடன் நிர்வாகம் இந்த மாற்றத்தைக் கைவிட்டது.
இந்தியர்களுக்குச் சிக்கல்?
இந்தச் சூழலில் தான் மீண்டும் டிரம்ப் நிர்வாகம் இதைக் கையில் எடுத்துள்ளது. குறிப்பாக இந்தியர்கள் ஹெச் 1 பி விசா மூலம் அதிகம் பயனடையும் நிலையில், அதில் முக்கிய மாற்றங்கள் வரலாம். அதேநேரம் அது இந்தியர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமா.. இல்லை சிக்கல் தருமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications