முதல் நாளே 100 உத்தரவு! இறங்கி அடிக்கும் டிரம்ப்..மெக்சிகோ சுவர் டூ தடுப்பூசி வரை! அதிரும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், அடுத்த வாரம் அதிபராகப் பதவியேற்க உள்ளார். இதற்கிடையே அதிபராகப் பதவியேற்கும் முதல் நாளே டிரம்ப் சுமார் 100 நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பல உத்தரவுகளை டிரம்ப் பிறப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த நவ. மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தாலும் அவர் இன்னும் அதிபராக பதவியேற்கவில்லை..

டிரம்ப்:
அந்நாட்டின் சட்டப்படி டிரம்ப் ஜனவரி 20ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அதிபராகப் பதவியேற்க முடியும். பதவியேற்பு விழாவுக்கு தேவையான பணிகளை டிரம்ப் டீம் இப்போது கவனித்து வருகிறது. இதற்கிடையே அதிபராகப் பதவியேற்கும் முதல் நாளாக சுமார் 100க்கும் மேற்பட்ட நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளை அவரது டீம் முழு வீச்சில் கவனித்து வருகிறது.
குடியரசு கட்சி எம்பிக்களுடன் தனிப்பட்ட முறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்ன மாதிரியான உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல்களை டிரம்பின் டீம் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக டிரம்பின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்பதை உயர்மட்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக குடியரசு கட்சி எம்பிக்களுக்கு ஒரு பிரசன்டெஷனையே டிரம்ப் டீம் செய்துள்ளது.
என்ன உத்தரவுகள்:
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, எரிசக்தி மேம்பாடு, ஃபெடரல் ஊழியர்களுக்கான விதிகளில் மாற்றம், பாலின விவகாரம், தடுப்பூசி கொள்கை குறித்த நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் முதல் நாளே பிறப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எந்தவொரு நபர் அதிபராகப் பதவியேற்கும் போதும் இதுபோல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிப்பது வழக்கமான ஒன்று தான். அதில் சில நிர்வாக உத்தரவுகள் மட்டுமே களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். மற்ற பெரும்பாலான உத்தரவுகள் அடையாள உத்தரவுகளாகவே இருக்கும். அதாவது வரும் காலத்தில் அதிபரது நடவடிக்கைகள் எதுபோல இருக்கும் என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த நிர்வாக உத்தரவுகள் இருக்கும்.
எம்பிக்கள் தகவல்:
இது குறித்து டிரம்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் கூறுகையில், "அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவரைக் கட்டும் பணி பைடன் ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதை டிரம்ப் முடிக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், சட்டவிரோதமாகக் குடியேறுவோரை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் வரை தற்காலிகமாக அவர்கள் தங்கள் எல்லையில் தடுப்பு மையங்களை அமைப்பது உள்ளிட்ட சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க அவர் பல திட்டங்களை வைத்திருக்கிறார். இதற்காக சுமார் 100 பில்லியன் டாலர்கள் அவர் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளார்" என்றார்.
சர்வதேச தலைவர்கள்
டிரம்பின் பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே, பிரிட்டனின் வலதுசாரி கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.. அதேபோல இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் பங்கேற்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications