முடிவுக்கு வரும் அமெரிக்கா-சீனா வர்த்தக போர்.. 115% வரை வரியை குறைக்க ஒப்புதல்.. இது ஏன் முக்கியம்?
வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே கடந்த சில காலமாகவே வர்த்தகப் போர் போக்கு தொடர்ந்து வந்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்திக் கொண்டே போனது. இதற்கிடையே இப்போது இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் முடிவுக்கு வருகிறது. இரு நாடுகளும் ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதத் தொடக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். ஒவ்வொரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் டிரம்ப் வரியை அறிவித்தார். இதன் காரணமாகச் சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

வரிகள் நிறுத்திவைப்பு
சில நாட்களுக்குப் பிறகு அப்போதே, ரெசிப்ரோக்கல் வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்திருந்தார். இருப்பினும், சீனா மீதான வரிகளை மட்டுமே உயர்த்தினார். சீனாவும் பதிலடியாக வரிகளை உயர்த்தின. இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்தியதால் வர்த்தகப் போரே ஏற்பட்டது. இந்தச் சூழலில் வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டன. அமெரிக்கா விரைந்த சீன அதிகாரிகள், இது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இதற்கிடையே அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதாகவே தெரிகிறது. இரு நாடுகளும் ரெசிப்ரோக்கல் வரிகளை 90 நாட்கள் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டன. சீன அதிகாரிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு அமெரிக்க டிரஷரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இரு நாடுகளும் வரிகளைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட பேச்சுவார்த்தை
கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற மிக நீண்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரி விதிப்பிற்குப் பிறகு இரு தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த முதல் உயர்மட்டப் பேச்சுவார்த்தை இதுவாகும். இதிலேயே இரு தரப்பிற்கும் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது.
எவ்வளவு சதவிகிதம் வரி குறைகிறது
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சீனப் பொருட்களுக்கான வரிகளை 145%ல் இருந்து அமெரிக்கா 30% ஆகக் குறைக்கும். அதேபோல சீனாவும் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 125%ல் இருந்து 10%ஆகக் குறைக்கும் என்று கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் மற்றும் அமெரிக்க டிரஷரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தலைமையில் "பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்த விவாதங்களைத் தொடரவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன
ஏன் முக்கியம்?
அமெரிக்கா சீனா இடையேயான இந்த வர்த்தகப் போர் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்கப் பங்குச்சந்தை தொடங்கி சர்வதேச அளவில் பல்வேறு பங்குச்சந்தைகள் சரிந்தே வர்த்தகமாகி வந்தன. ஆனால், இன்று அமெரிக்கா சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியான செய்தி வெளியான உடனேயே உலகளவில் பங்குச்சந்தைகள் அதிகரிக்கத் தொடங்கின. மேலும், தங்கம் விலையும் சரியத் தொடங்கியது...
மற்ற நாடுகளுக்கு ரெசிப்ரோக்கல் வரியை டிரம்ப் 90 நாட்கள் மட்டுமே தள்ளி வைத்திருந்த நிலையில், வரும் நாட்களில் மேலும் பல நாடுகளுடன் அமெரிக்கா தனது வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications