கொடுமை.. குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களையே குறிவைத்து கைது செய்யும் டிரம்ப் அரசு! ரொம்ப மோசம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில் இப்போது குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களையே, அவர்கள் வெளிநாட்டினர் என்ற ஒரே காரணத்திற்காகக் குறிவைத்து கைது செய்து வருகிறது டிரம்ப் நிர்வாகம். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்ட சூழலில், இப்போது நிலைமை எல்லை மீறிப் போய்விட்டது. அதாவது டிரம்ப் நிர்வாகம் இப்போது குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களையே குறிவைத்து கைது செய்து வருகிறது.

பாதிக்கப்பட்டவரே கைது
அப்படித் தான் ஃபெலிப் டி ஜீசஸ் ஹெர்னாண்டஸ் மார்செலோ என்பவரை அந்நாட்டுக் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தான் ஹெர்னாண்டஸ் மார்செலோ மீது சில கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி, அவரது உடமைகளைப் பறித்துச் சென்றனர். அதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது விசாரணைக்காக ஹெர்னாண்டஸின் காரையும், அவரிடம் இருந்த பணத்தையும் அந்த ஊர் போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
கைது நடவடிக்கை
சிகிச்சை முடிந்து மீண்டு வந்த ஹெர்னாண்டஸ் மார்செலோ, தனது உடமைகளைப் பெற அயோவா மாகாணத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்திற்குப் போய் இருக்கிறார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் திடீரென அவரையே கைது செய்துவிட்டனர். கடந்த காலங்களில் ஏதோ ஒரு சின்ன பார்கிங் பைனை அவர் செலுத்தவில்லையாம். அதைக் காரணமாகச் சொல்லி அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே அவர் குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் 2021-ல் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தார் என்பதால் அவரை நாடு கடத்தும் பணிகளைக் குடியுரிமை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். ஹெர்னாண்டஸ் மார்செலோ இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரால் தனது 9 வயது மகனை நேரில் கூட பார்க்க முடியவில்லை. இது மார்செலோவுக்கு மட்டும் நடக்கவில்லை. டிரம்ப் வந்த பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
ரூல்ஸ் நீக்கம்
அமெரிக்காவில் பைடன் காலத்தில் ஒரு விதி கொண்டு வரப்பட்டது. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியாக இருப்போருக்குக் கைது மற்றும் நாடுகடத்தல் நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதாவது அமெரிக்காவில் நடந்த ஒரு குற்றத்திற்குச் சாட்சியாக இருக்கும் ஒருவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வந்திருப்பது தெரிந்தாலும் அவர் மீதும் அவரது குடும்பம் மீதும் நடவடிக்கை இருக்காது.
இவர்களுக்கு டி அல்லது வி விசா வழங்கப்பட்டது. விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதாலேயே இந்த விதியைக் கொண்டு வந்துள்ளனர். இந்த ரூல்ஸை டிரம்ப் நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால் குற்றத்தால் பாதிக்கப்படுவோரைக் கைது செய்யப்பட்டு, நாடுகடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடரும் கொடூரம்
சமீபத்தில் இப்படிதான் கடத்தல் மற்றும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரையே அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் விசா பெறுவதற்குக் கைரேகை வைக்கச் சென்ற நிலையில், அவரை கைது செய்திருக்கிறார்கள். இதற்குக் குடியேற்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதி மட்டுமில்லை. அமெரிக்கர்களுக்கே கூட எதிராக மாறலாம். ஏனென்றால் தங்கள் மீதே நடவடிக்கை இருக்கும் என்பதால் வெளிநாட்டினர் குற்றங்களைப் புகாரளிக்கவோ அல்லது போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவோ மாட்டார்கள். இது சமூகத்திற்கே ஆபத்தாக மாறலாம் என எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications