ரூ. 3,82,82,08,00,00,00ஐ தொட்ட அமெரிக்காவின் கடன்.. இந்திய பொருளாதாரத்தை விட 10 மடங்கு அதிகம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் கடன் முதல் முறையாக 40 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால், இது சுமார் ரூ.3,400 லட்சம் கோடியை தொட்டுள்ளது. அதாவது இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை விட அமெரிக்காவின் இந்த கடன் சுமார் 10.2 மடங்கு பெரியதாகும். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

உலகின் அனைத்து நாடுகளுமே கடன் வாங்கியே நலதிட்டங்களை செயல்படுத்தும். இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கு இல்லை. இதற்கிடையே உலக வல்லரசான அமெரிக்காவின் கடன் முதல் முறையாக 40 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3,400 லட்சம் கோடியை அமெரிக்காவின் கடன் தொட்டுள்ளது.

Donald Trump US US debt

10 மடங்கு பெரியது

இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை விட அமெரிக்காவின் இந்த கடன் சுமார் 10.2 மடங்கு பெரியதாகும். கடனை விட அது அதிகரிக்கும் வேகமாக அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

முன்பு கடன் வாங்குவதில் அமெரிக்க அரசு யோசித்து யோசித்து செயல்பட்டு வந்தது. அதாவது கடனை வாங்குவதற்கு முன்பு பல முறை யோசித்தே முடிவெடுத்தது. ஆனால், சமீப காலங்களில் இந்த நடைமுறையில் மாற்றம் வந்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து கடன்களை வாங்கி குவித்து வருகிறது. ஒப்பீட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கா தனது முதல் 1 டிரில்லியன் டாலர் கடனை சேர்க்க கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் எடுத்தது. ஆனால், கடைசி 1 டிரில்லியன் டாலர் சேர்க்க வெறும் 5 மாதங்களுக்கும் குறைவான காலமே எடுத்துள்ளது.

வேகமாக அதிகரிக்கிறது

கடந்த மார்ச் மாதத்தில்தான் அமெரிக்காவின் கடன் 39 டிரில்லியன் டாலரை எட்டியது. 2025 அக்டோபரில் 38 டிரில்லியன் டாலராக இருந்த கடன், இப்போது அது 40 டிரில்லியனை தொட்டுள்ளது. இந்தளவுக்கு மிக வேகமாக அமெரிக்காவின் கடன் தொட்டுள்ளது. அமெரிக்காவின் கடனை அடைப்பேன். அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக மாற்றுவேன் என சொல்லி ஆட்சியை பிடித்த டிரம்ப் காலத்தில் தான் கடன் இந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதே நகைமுரண்!

அதேநேரம் அமெரிக்காவின் 40 டிரில்லியன் டாலர் கடனை எட்ட டிரம்ப் மட்டுமே காரணம் என சொல்லிவிட முடியாது. 2017 ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அதிபராக பதவியேற்றபோது அமெரிக்காவின் மொத்தக் கடன் 19.95 டிரில்லியன் டாலராக இருந்தது. தற்போது அது இரு மடங்குக்கும் அதிகமாகியுள்ளது. இடைப்பட்ட காலத்தில் கடன் ஏன் அதிகரித்தது என பார்த்தால் கொரோனா தான் காரணமாக இருந்தது. கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை காப்பாற்ற அமெரிக்க அரசு மிக பெரிய அளவில் கடன் வாங்கியது. 2017க்கு பிறகு அதிகரித்த கடனில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டதாகும்.

காரணம்

ஆனால், கொரோனா முடிந்த பிறகும் கடன் அதிகரிப்பு நிற்கவில்லை. அரசு வருவாயை விட அதிகமாக செலவு செய்வது, தொடர்ந்து நீடிக்கும் பட்ஜெட் பற்றாக்குறை, அதிகரிக்கும் அரசு செலவுகள் மற்றும் ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டி ஆகியவை கடனை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இப்போது அமெரிக்காவின் நிதிச்சுமையில் மிகவும் கவலைக்குரிய அம்சமாக மாறியிருப்பது கடனுக்கான வட்டி செலவு தான்.

இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க அரசு சுமார் 1.1 டிரில்லியன் டாலரை வட்டிக்காக செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பீட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால் 2025 நிதியாண்டில், கடனுக்கான நிகர வட்டி செலவு, அமெரிக்காவின் மொத்த பாதுகாப்புத்துறை செலவையே மிஞ்சியது. 2026 நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், வட்டி செலவு அமெரிக்காவின் மருத்துவ துறை ஒதுக்கீட்டை முந்தியுள்ளது. இதனால் அரசின் மிக பெரிய செலவுகளில் ஒன்றாக கடனுக்கான வட்டி மாறியுள்ளது.

வட்டிக்கே பெரிய தொகை

அதாவது அமெரிக்கா தனது வருவாயில் பெரும் தொகையை புதிய திட்டங்களுக்கு செலவிடாமல், கடந்த காலத்தில் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கே செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்க அரசு வரி உள்ளிட்ட வருவாயை விட அதிகமாக செலவு செய்கிறது. இந்த வருவாய் செலவு இடைவெளி தான் பட்ஜெட் பற்றாக்குறை. அதை சமாளிக்க அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை வெளியிட்டு கடன் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் புதிய கடன், ஏற்கனவே உள்ள கடனுடன் சேர்கிறது. இதனால் கடன் அதிகரிக்க அதிகரிக்க, அதற்கான வட்டியும் அதிகரிக்கிறது. அதிக வட்டி செலவு மீண்டும் பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரித்து, மேலும் கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்குகிறது.

எச்சரிக்கை

அதே வேகத்தில் அமெரிக்காவின் கடன் அதிகரித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை விட தடந் இரண்டு மடங்கு அதிகமான வேகத்தில் அதிகரிக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 40 டிரில்லியன் டாலர் என்ற அளவை கடன் தொட்டிருந்தாலும் கூட அமெரிக்காவால் உடனடியாக கடன் வாங்க முடியாது என சொல்லிவிட விட முடியாது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை நம்பி இன்னுமே பல நாடுகள், முதலீட்டு நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தே வருகிறது.

ஆனால், இதுவே எப்போதும் இருக்கும் என சொல்ல முடியாது. கடன் தொடர்ந்து அதிகரித்தால், வட்டி செலவுகள் அரசின் வருவாயில் அதிகப் பகுதியை விழுங்கும். அதன் காரணமாக பொருளாதார நெருக்கடி, போர் அல்லது வேறு ஏதேனும் அவசரநிலை வந்தால் அதை அமெரிக்காவில் சமாளிக்க முடியாமல் போகலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 40 டிரில்லியன் டாலர் கடன் என்பது பிரச்சினை இல்லை. ஆனால், அது அதிகரிக்கும் வேகமே பிரச்சினையாக இருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+