தடுமாறும் அமெரிக்கா.. என்னவெல்லாம் பேசினாரு டிரம்ப்! இப்போ பாருங்க சொந்த நாட்டையே காப்பாற்ற முடியல
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சிறந்த நாடாக மாற்றப் போகிறேன் என டிரம்ப் இஷ்டத்திற்குப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், உண்மையில் அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையில் தள்ளப்படும் விளிம்பில் இருப்பதாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் மார்க் சாண்டி எச்சரித்துள்ளார். இதற்காக அவர் முக்கியமான டேட்டா ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிரம்ப் அதிபரானது முதலே ஏகப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக மாற்றப் போகிறேன் எனச் சொல்லியே அவர் இதுபோன்ற உத்தரவுகளைப் போட்டு வருகிறார். ஆனால், ரியாலிட்டி அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது.

முக்கிய வார்னிங்
அதாவது அமெரிக்கா இப்போது பொருளாதார மந்தநிலையின் விளிம்பில் இருப்பதாக, மூடிஸ் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் பல்வேறு டேட்டாக்களை வைத்துப் பார்க்கும்போது மந்தநிலை நெருங்குவது போலவே தெரிவதாக மார்க் சாண்டி கூறியுள்ளார். கடந்த 2008ல் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிய நிதி நெருக்கடியை முன்கூட்டியே சரியாகக் கணித்தவர் தான் இந்த மார்க் சாண்டி. எனவே, இவர் கூறுவது எப்போதும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும்.
அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான பங்களிப்பைக் கொடுக்கும் மாகாணங்கள் இப்போது ஏற்கனவே பொருளாதார மந்தநிலையில் உள்ளன அல்லது அந்த நிலையை நெருங்கி வருகின்றன எனக் கூறியிருக்கிறார்.
மாகாண வாரியான டேட்டா
இது தொடர்பாக அவர் மேலும், "பல்வேறு டேட்டாக்களை ஆய்வு செய்து பார்த்துவிட்டேன். அமெரிக்க ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்குக்கு மேலான பங்களிப்பைக் கொடுக்கும் மாகாணங்களில் மந்தநிலை ஏற்பட்டுள்ளன. அடுத்த 33% மாகாணங்கள் நிலையாக உள்ளன. மீதமுள்ள மாகாணங்கள் மட்டுமே வளர்ச்சிப் பாதையில் உள்ளன" எனப் பதிவிட்டுள்ளார்.
விலையேற்றம்
இது தொடர்பாக முன்பு சாண்டி அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டியில், "அமெரிக்கர்கள் இப்போது இருவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஒன்று கடைகளில் பல்வேறு பொருட்களின் விலை உயரும். அடுத்துப் பல முக்கிய துறைகளில் இதனால் வேலையிழப்புகளும் கூட ஏற்படலாம். அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்து வருகின்றன. அதை டேட்டாவில் நாம் பார்க்கலாம். வரும் காலத்தில் விலை மேலும் கூட உயரும். அன்றாடம் வாங்கும் பொருட்களிலேயே விலையேற்றத்தைப் பார்க்கும் அளவுக்கு நிலைமை இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
செலவினம், வேலைவாய்ப்பு, உற்பத்தி தொடர்பான டேட்டாவை வைத்துப் பார்த்தால் பொருளாதாரம் மந்தநிலைக்கு மிக அருகில் உள்ளது என சாண்டி கூறினார். அமெரிக்க நிறுவனங்களின் லாபத்தைப் பாதிக்கும் டிரம்பின் வரிகளையே இதற்குக் காரணமாகக் குறிப்பிடுகிறார். அதாவது டிரம்ப் வரிகளே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என அவர் சொல்கிறார்.
பணவீக்கம்
அமெரிக்காவில் இப்போது பணவீக்கம் 2.7 சதவீதமாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4 சதவீதத்தை எட்டும் என்றும் சாண்டி கணித்துள்ளார். மேலும் மாகாண வாரியாக எவை ஆபத்தில் உள்ளன.. எந்த மாகாணங்களில் ரிஸ்க் குறைவு என்பதையும் அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.
நிலைமை மோசம்
அமெரிக்காவில் இப்போது நுகர்வோரின் செலவினம், அதாவது பொதுமக்கள் செலவு செய்யும் விகிதம் மிகக் குறைவாக இருக்கிறதாம். அதாவது மக்கள் பொருளாதாரச் சிக்கல், வேலையிழப்பிற்குப் பயந்து செலவு செய்யப் பயப்படுகிறார்கள். அல்லது செலவு செய்யப் பணம் இல்லாத சூழல் இருக்கிறது. பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்ட 2008-09 காலகட்டத்திற்குப் பிறகு செலவினம் இந்தளவுக்குச் சரிவது இதுவே முதல்முறை. அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையின் விளிம்பில் இருப்பதையே இது காட்டுவதாக சாண்டி சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications