இரவோடு இரவாக அமெரிக்கா எடுக்கும் முடிவு.. "அதிர போகுது தங்க மார்க்கெட்.." இந்த முறை எவ்வளவு உயரும்
வாஷிங்டன்: கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று சட்டென அதிகரித்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். அமெரிக்கா இன்றிரவு எடுக்கப் போகும் பிரதான ஒரு முடிவே இந்த திடீர் விலையேற்றத்திற்குக் காரணமாகும். அமெரிக்கா அப்படி என்ன முடிவெடுக்கப் போகிறது.. இது சர்வதேச சந்தையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்காவில் நேற்றும் இன்றும் அந்நாட்டின் பெடரல் வங்கி கூட்டம் நடைபெற்றது. அங்கு மானிடரி பாலிசி எனப்படும் பணக் கொள்கை தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடந்தன. நமது நாட்டில் ரிசர்வ் வங்கி எப்படிக் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை கூடி வட்டி உள்ளிட்ட நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுப்பார்களோ கிட்டத்தட்ட அதுபோன்ற நடைமுறை தான் இது.

இரவு எடுக்கும் முடிவு
அமெரிக்க பெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய கூட்டத்தைத் தொடர்ந்து, பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல், இறுதி முடிவை எடுக்கப் போகிறார். இது அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை நமக்குத் தரும். அதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவுக்கு இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்.
இந்த மீட்டிங்கில் வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் அது தொழிற்துறைக்கு ரொம்பவே முக்கியமான ஒரு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது. வட்டி குறைந்தால் கடன் வாங்கி தொழில்களில் முதலீடு அதிகரிக்கும்.. இதனால் பொருளாதாரத்திற்கு நல்லது என்பதாலேயே பங்குச்சந்தைகள் ரேட் ஏறும். அமெரிக்காவின் சந்தை நிலவரமே உலகெங்கும் எதிரொலிக்கும் என்பதால் இந்தியாவிலும் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
மேலும், இதுபோல வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, டாலர் மதிப்பு குறையும். அப்படி டாலர் மதிப்பு குறையும்போது தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். ஏற்கனவே வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பின் காரணமாகவே இந்தியாவில் கடந்த சில நாட்களாகக் குறைந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் வரும் நாட்களில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் இதேபோல நடந்த கூட்டத்தில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை 0.25% குறைத்து, வட்டி விகிதத்தை 4-4.25% ஆக நிர்ணயித்தது. ஓராண்டுக்குப் பிறகு அப்போது தான் முதல்முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டது அதுவே முதல்முறை. அப்போதே தங்கம் விலை 5% வரை அதிகரித்திருந்தது. எனவே, மீண்டும் அதுபோல நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
சிக்கல்
அதேநேரம் நாம் இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது அமெரிக்க ஷட் டவுன் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்கிறது. அமெரிக்காவில் பல்வேறு துறைகள் இதனால் முடங்கியுள்ளதால் பல முக்கிய டேட்டாக்கள் வெளியாகவில்லை. இந்த டேட்டாக்களை வைத்தே எப்போதும் அமெரிக்க பெடரல் வங்கி முடிவெடுக்கும் என்பதால் இதுவும் ஒரு சிக்கலாகத் தொடர்கிறது..
வட்டி குறைப்பு கிட்டத்தட்ட உறுதி
இருப்பினும், அமெரிக்கப் பொருளாதாரச் சூழல் காரணமாக இந்த முறை வட்டி குறைப்பு கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்கிறார்கள். அதேநேரம் அடுத்து கூட்டம் நடைபெறும் டிசம்பர் மாதம் வட்டியைக் குறைப்பது குறித்து எந்தவொரு உறுதியையும் தர அமெரிக்க பெடரல் வங்கி தயாராக இல்லையாம். அப்போதிருக்கும் வேலைவாய்ப்பு டேட்டா, பொருளாதாரச் சூழல், பணவீக்கத்தைப் பொறுத்து முடிவெடுக்க அமெரிக்க பெடரல் வங்கி திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications