ஈரான் கண்ணில் மண்ணை தூவிய அமெரிக்கா.. டீப் பகுதிக்குள் சென்று வீரரை மீட்டது எப்படி? ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்
வாஷிங்டன்: ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் எஃப் -15 ரக போர் விமானத்தின் விமானிகளில் இருவரில் ஒருவரை அமெரிக்கா மீட்ட நிலையில் மற்றொரு வீரரையும் தற்போது அமெரிக்கா மீட்டுள்ளது. ஈரான் கண்ணில் மண்ணை தூவி, அந்த நாட்டில் அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடைபெறும் பகுதிக்குள் சென்று ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகையில் விமானியை அமெரிக்கா மீட்டு இருக்கிறது. இது குறித்த விவரங்களை காணலாம்.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறந்துவிட்டு ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த நாட்டை கற்காலத்திற்கே அனுப்புவோம் எனவும், நரகம் காத்திருக்கிறது எனவும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்து வருகிறார்.

எப்.15 போர் விமானம்
டிரம்பின் இந்த மிரட்டலை கண்டுகொள்ளாத ஈரான், பதிலடிக்கு தயாராக இருப்பதாக கூறி வருகிறது. ஈரான் மீது அதி நவீன போர் விமானங்களை கொண்டு அமெரிக்கா தாக்கி வரும் நிலையில், ஈரான் விமானங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவின் அதி நவீன எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்.
இதில் அந்த ஜெட் விமானத்தில் இருந்த ஒரு விமானி தப்பி விட்டதாக கூறப்பட்ட நிலையில், மற்றொரு விமானி ஈரானுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை உயிருடன் பிடிக்க ஈரானும் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஈரானின் கண்ணில் மண்ணை தூவி அமெரிக்கா, அந்த வீரரை அதிரடியாக மீட்டுள்ளது.
அமெரிக்கா மீட்டது எப்படி?
ஈரானுக்குள் புகுந்து அமெரிக்கா, எப்படி தனது நாட்டு வீரரை மீட்டது என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். ஈரானுக்குள் சிக்கிய அந்த அமெரிக்க பைலட்டை மீட்கும் பணிக்காக நூற்றுக்கணக்கான விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியதாக அல்ஜசீர கூறியுள்ளார்.
அமெரிக்க படை வீரர்கள் ஈரான் பிராந்தியத்திற்குள் மிகவும் உள் பகுதி வரை சென்று அவரை மீட்டுள்ளனர். இரவு தொடங்கிய தேடுதல் வேட்டை மறுநாள் பகல் வரை நீடித்து இருக்கிறது. அமெரிக்கா திட்டமிட்டபடி இது அவ்வளவு எளிதாக அமையவில்லையாம்.. கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டைக்கு நடுவிலேயே அமெரிக்க வீரரை பத்திரமாக அந்த நாட்டு வீர்கள் மீட்டு இருக்கிறார்கள்.
கண்காணிப்புகளை மீறி
அமெரிக்க வீரரை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக சிறப்பு மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க விமானி இருக்கும் இடத்தை ஈரானியர்கள் நெருங்கிவிடாமல் இருக்க ஈரான் கன்வய்கள் மீது குண்டுகள் வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் விரட்டியுள்ளது. அமெரிக்க வீரர் மறைந்து இருந்த இடம் அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடைபெறும் பகுதி என்பதால் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்கள் இங்கு எப்போதுமே ஆக்டிவாகவே உள்ளன.
இந்த கண்காணிப்பையும் மீறி அமெரிக்கா அதிரடியாக தனது வீரரை மீட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த ஆபரேஷனில் HH-60W 'ஜாலி கிரீன் II' மீட்பு ஹெலிகாப்டர்கள், A-10 வார்தாக் தாக்குதல் விமானங்கள், HC-130 வான்வழி எரிபொருள் நிரப்பும் மீட்பு விமானம், தூரத்திலிருந்து செயல்படும் F-35 மறைவு போர் விமானங்கள், சிறப்பு படையினர் மற்றும் போர்த் தேடுதல் மற்றும் மீட்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளது.
பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள்
நேற்று முன் தினம் போர் விமானத்தில் இருந்து குதித்த இரு விமானிகளையும் உடனடியாக தனது காம்ஸ் அமைப்புகள் மூலமாக அமெரிக்கா டிரேஸ் செய்துள்ளது. இதில் ஒரு விமானியை சில மணி நேரங்களில் மீட்டாலும் மற்றொருவரை கண்டுபிடிக்கவே ஒரு நாளுக்கு மேல் ஆகியுள்ளது. இதையடுத்து, அந்த பைலட்டை தேடும் பணியில் CIA தனது சிறப்பு திறன்களை பயன்படுத்தியது.
மலைப்பகுதிகளில் பயணித்த அந்த விமான வீரர், உள்ளூர் மக்களிடமிருந்து சிக்காமல் மறைந்து சென்றுள்ளார். பின்னர் அவரது துல்லியமான இருப்பிடத்தை சிஐஏ, வெள்ளை மாளிகை, அமெரிக்க ராணுவம் மற்றும் பெண்டகனுடன் பகிர்ந்தது. இதையடுத்து உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
நேற்று இரவு, சிறப்பு படையினர் குழு, அமெரிக்க வீரர் மறைந்து இருந்த பகுதிக்கு அருகில் அனுப்பப்பட்டது. A-10 வார்தாக் தாக்குதல் விமானங்கள் நெருக்கமான வான்பாதுகாப்பை வழங்கிய நிலையில், கடுமையான துப்பாக்கிச்சூட்டிற்கு நடுவில் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.












Click it and Unblock the Notifications