அமெரிக்காவில் மொத்தமாக முடங்கிய விமான சேவை! பல ஆயிரம் விமானங்கள் அப்படியே நிறுத்தம்! பயணிகள் அவதி
வாஷிங்டன்: அமெரிக்காவில் திடீரென விமான சேவைகள் மொத்தமாக முடங்கி உள்ளது. பல ஆயிரம் விமானங்கள் அப்படியே விமான நிலையங்கள், ஓடுபாதைகளில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அமெரிக்காவில் திடீரென்று மொத்தமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் புறப்பட இருந்த விமானங்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், ஓடுபாதைகளில் விமானங்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஆயிரத்திற்கும் அதிகமான விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் தவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அமெரிக்காவின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கான தகவல் தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் நாட்டின் மொத்த விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். திருமண விழா, பிசினஸ் ட்ரிப், சுற்றுலா, உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் விமான நிலையத்திலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுபற்றி அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அதிகாரிகள் கூறுகையில், ''நாடு முழுவதும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட கம்யூனிகேஷன் பிரச்சனை தான் முக்கிய காரணம்'' என்றனர்.
இதுபற்றி அமெரிக்காவின் போக்குவரத்து துறை அமைச்சர் சீன் டப்பி கூறுகையில், ''நாடு முழுவதும் விமானங்களின் சேவையை திடீரென்று பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுத்தி வைகத்துள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களின் தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது. பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் டெக்னீசியன்கள் பிரச்சனையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி கூடுதல் தகவல் கிடைத்தவுடன் அதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
