ஈரான் மீது இதுவரை இல்லாத மிகப்பெரும் தாக்குதல்? தயார் நிலையில் அமெரிக்கா ராணுவம்! எகிறும் டென்ஷன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுமதி கொடுத்த 96 மணி நேரத்திற்குள் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த அந்த நாட்டு மத்திய கிழக்கில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் வெடித்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை தொடுத்தன. ஆனால் 8 மாதங்கள் ஆகியும் இந்த போர் முடிந்தபாடில்லை.

இதுவரை இல்லாத அளவு தாக்குதல் நடத்த..
ஈரான் அமெரிக்கா போர் நீடித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படாமல் உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் தேர்தல் நடந்து வருவதாலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுவதற்கான முயற்சிகள் நடப்பதாலும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று சர்வதேச நோக்கர்களால் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நட்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டால், அடுத்த 96 மணி நேரத்திற்குள் ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தயாராக இருப்பதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்த..
ஈரான் மீது தாக்குதலை நடத்த தேவையான அளவுக்கு படைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே உள்ளதாகவும், ஈரான் மீது புதிய தாக்குதலை தொடுப்பது பற்றி டிரம்ப் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும், சிஎன்.என் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை நடத்த ராணுவ தலைவர்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, இதற்கு முன்பாக ஈரான் மீது குறிப்பிட்ட வரைமுறையுடன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ரேடர்கள், ஏவுகணை ஏவு தளங்கள் மற்றும் பிற ராணுவ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் ராணுவ தளங்கள், அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க மத்திய கட்டளை மையம் மற்றும் பெண்டகன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிலடி கொடுக்க ஈரானும் தயார்
அதேநேரத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க ஈரானும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து அடுத்த கட்ட தாக்குதலை தொடர்ந்தால் ஈரானும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சிக்குழுவும் இணைந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தவும், மத்திய கிழக்கு தாண்டியும் தாக்குதல் நடத்தவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, மேற்காசிய போரால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் மீண்டும் போர் தீவிரம் அடைந்தால் கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் உலக நாடுகள் நிலமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.





Click it and Unblock the Notifications
