H-1B visa: ரூ.88 லட்சம் கட்டணம்.. யாரை பாதிக்கும்? புதிய அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அரசு
வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை பார்க்க வழங்கப்படும் H-1B விசாவின் கட்டணத்தை ரூ.8.8 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தியது அமெரிக்க அரசு. இதனால் இந்த விசாவை வைத்திருந்து விடுமுறைக்கு சொந்த நாட்டுக்கு சென்றவர்கள் அவசர அவசரமாக அமெரிக்கா திரும்பினர். ஆனால் இது ஏற்கெனவே விசாவை வைத்திருப்பவர்களை பாதிக்காது என்று அமெரிக்க அரசு விளக்கமளித்துள்ளது.
H-1B விசா என்பது, வெளிநாடுகளில் உள்ள திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து வேலை வாங்க பயன்படும் நடைமுறையாகும். அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த விசா முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1990 முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விசாவை வைத்துக்கொண்டு மூன்று ஆண்டுகள் வரை அமெரிக்காவில் இருக்க முடியும். அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை தங்கலாம்.

இந்த விசாவுக்கான கட்டண தொகையை பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் வழங்கும். இந்நிலையில் விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அமெரிக்கா ஐடி நிறுவனங்கள், உடனடியாக இந்த விசாவை வைத்திருக்கும் தங்கள் பணியாளர்கள் யாரேனும் விடுமுறைக்காக சொந்த நாடுகளுக்கு சென்றிருந்தால் அவர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை மொத்தம் 5 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் H-1B விசாவை வைத்திருக்கிறார்கள். அதில் 71% அதாவது ஏறத்தாழ 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். எனவே இந்தியாவுக்கு வந்திருந்த விசா வைத்திருக்கும் அமெரிக்க பணியாளர்கள், நேற்று அடித்துப் பிடித்து விமானங்களில் ஏறி அமெரிக்காவுக்கு சென்றிருந்தனர். திடீர் டிமாண்ட் காரணமாக விமான கட்டணமும் கடுமையாக உயர்ந்திருந்தது. இப்படி இருக்கையில் தற்போது அமெரிக்க அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்து இருக்கிறது.
அதாவது இது ஒரு முறை மட்டுமே செலுத்தப்பட வேண்டிய கட்டணம் என்றும் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் கட்டணம் கிடையாது என்றும் விளக்கம் அளித்து இருக்கிறது. ஏற்கனவே H-1B விசாவை வைத்திருப்பவர்கள் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய இந்த கட்டணத்தை செலுத்த தேவையில்லை. வழக்கமாக வெளிநாடு செல்வதை போல H-1B விசா வைத்திருப்பவர்கள் வெளிநாடு சென்று அமெரிக்காவுக்கு திரும்பலாம்.
இந்த கட்டணம் புதியதாக விசாவை விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது இந்த ஆண்டு செப். 21 தேதிக்கு முன்னதாக யாரெல்லாம் H-1B விசாவை கோரி விண்ணப்பித்திருந்தார்களோ, அவர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது. அடுத்த ஆண்டு விண்ணப்பவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும் என்று அமெரிக்க அரசு விளக்கமளித்திருக்கிறது.
எனவே இந்த விசாவை வைத்திருக்கும் இந்திர்கள் அமெரிக்காவுக்கு போக அவசரப்பட வேண்டாம். விடுமுறையை முடித்து பொறுமையாக போனால் போதுமானது.












Click it and Unblock the Notifications