இந்தியா மீதான வரி.. டிரம்புக்கு எதிராக கொந்தளித்த அமெரிக்க எம்பி! சொந்த நாட்டிலேயே வெடித்த கலக குரல்
வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதாக சொல்லி, இந்தியாவுக்கு அமெரிக்கா வரி போட்டிருந்தது கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இப்படி வரி போட்டது மிகவும் தவறான விஷயம் என டிரம்புக்கு எதிராக அமெரிக்க எம்பி பிராட் ஷெர்மன் கொந்தளித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50% வரியை டிரம்ப் போட்டிருந்தார். இதில் 25%க்கு காரணம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதுதான் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இங்குதான் பிரச்சனையே.. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதுதான் வரிக்கு உண்மையான காரணமா? என ஷெர்மன் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஹங்கேரி அரசை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த நாடு ரஷ்யாவிடமிருந்து 90% அளவுக்கு எண்ணெய் வாங்குகிறது. என்ன வரி விதிக்கப்பட்டது? அதேபோல, சீனாவும் அதிக அளவில் எண்ணெய்யை வாங்குகிறது. சீனாவுக்கு வரியை போட ரஷ்ய எண்ணையை டிரம்ப் காரணமாக சொல்லவில்லையே!
2 நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்தியா வெறும் 21% அளவுக்கு மட்டுமே எண்ணெய்யை வாங்கியிருந்தது. குறைவான அளவு எண்ணெய் வாங்கியதால் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? இந்த வரிக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். அல்லது டிரம்பின் கொள்கை தவறானதாக இருக்க வேண்டும் என்று ஷெர்மன் கூறியிருக்கிறார்.
இந்தியாவை பொறுத்தவரை, வரி பஞ்சாயத்து முடிந்துவிட்டது. இரு நாடுகளும் எட்டியுள்ள புதிய பொருளாதார ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியா மீதான வரியை அமெரிக்கா 18% ஆக குறைத்திருக்கிறது. ஆனால், இந்தியா இதற்கு முன்னர் அமெரிக்காவுக்கு போட்டிருந்த வரி 0% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா மீதான வரியை குறைத்த டிரம்ப், இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது என்றும், தவறி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய்யை வாங்கினால் அதிகபட்ச வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி தவறு என்று ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்த வரி குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரத மாதாவை பாஜக அரசு விற்றுவிட்டது என்று கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications