சீக்ரெட் மீட்டிங்.. உள்ளே வந்த அமெரிக்கா.. மறுநாளே இம்ரான் கானுக்கு ஆரம்பித்த தலைவலி! பகீர் தகவல்
வாஷிங்டன்: இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படப் பின்னணியில் இருந்தது அமெரிக்கா என்பதைக் காட்டும் வகையிலான சில ஆவணங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இப்போது மீண்டும் அரசியல் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே அங்குக் கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்த இம்ரான் கான் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் பிரதமர் பதவியை இழக்கவே அமெரிக்கா தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான்: கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த இம்ரான் கானுக்கு 2022இல் சிக்கல் ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகள் அவரது கூட்டணிக்கு ஆதரவாக இருந்த கட்சியினரே திடீரென அவருக்கு எதிராகத் திரும்பினர். இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அவரிடம் இருந்து பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையே இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக தி இன்டர்செப்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
2022 பிப். மாதம் ஆரம்பித்த உக்ரைன் போர் விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. ஆனால் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்கா கோபம் கொண்ட இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க இதுவே காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சீக்ரெட் மீட்டிங்: கடந்த 2022 மார்ச் 7ஆம் தேதி அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கானை அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் இரண்டு பேர் சந்தித்தாக தி இன்டர்செப்ட் தெரிவித்துள்ளது. இந்த மீட்டிங் நடந்த மறுநாளே அதாவது மார்ச் 8ஆம் தேதி இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
உக்ரைன் போரில் பாகிஸ்தானின் நடுநிலை நிலைப்பாட்டிற்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் செயலாளர் டொனால்ட் லூ அந்த மீட்டிங்கில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதைச் சரி செய்ய நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்றும் லூ தெரிவித்ததாக அதில் கூறப்படுகிறது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: டெனால்ட் லூ மேலும் கூறுகையில், "நீங்கள் எதற்காக நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தீர்கள்.. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள மக்களுக்கு ஏன் பாகிஸ்தான் இந்த நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தனர் என்ற கேள்வி இருக்கிறது. எங்களுக்குத் தரப்பில் இருந்து பார்த்தால் இது நடுநிலை நிலைப்பாடு போலத் தெரியவில்லை. எதிரான நிலைப்பாடு போலவே தெரிகிறது" என்று அவர் சொன்னதாக தி இன்டர்செப்ட் தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் மாற்றப்பட்டால், மற்ற அனைவரும் மன்னிக்கப்படுவார்கள் என்றும் லூ கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது வெற்றியடைந்தால்.. அனைவரும் வாஷிங்டனால் மன்னிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா திட்டவட்டம்: உக்ரைன் போர் என்பது அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் உறவைப் பாதிக்காது என்று நம்புவதாகப் பாகிஸ்தான் தூதர் கூறியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கு லூ, "உங்கள் நிலைப்பாடு ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் நினைக்கிறேன்.. பாகிஸ்தானில் அரசியல் சூழ்நிலை மாறுமா என்பதைப் பார்க்க சில நாட்கள் காத்திருப்போம். மாறினால் இந்த உறவு மீண்டும் சுமுகமாக இருக்கும்" என்றும் அவர் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதாவது பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கா அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாகவும் அதன் தொடர்ச்சியாகவே அங்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மறுப்பு: அமெரிக்க அதிகாரிகள் மேலும் கூறுகையில், "இருப்பினும், இதனை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய நாளில், அப்போதையே பாக். பிரதமர் மாஸ்கோ சென்றது குறித்து நாங்கள் கவலை தெரிவித்தோம் என்றும் மற்றபடி எந்தவொரு அழுத்தத்தையும் தரவில்லை என்று" அவர்கள் தெரிவித்தனர்.
இம்ரான் கான் அப்போதே பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கான பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகத் தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications