அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டிஸ்மிஸ்.. அதிரடி காட்டிய டிரம்ப்.. என்ன காரணம் தெரியுமா?
வாஷிங்டன்: கடந்த மார்ச் மாதம் ஏமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்த தகவல்கள் லீக் ஆனது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கு அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகரான மைக் வால்ட்ஸ் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் டிரம்ப் மைக்கை டிஸ்மிஸ் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா பொதுவாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தும். அதாவது அமெரிக்காவுக்கு யாரால் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறார்களோ அவர்கள் மீது தாக்குதலை நடத்துவார்கள். அப்படித் தான் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை அமெரிக்க ராணுவம் தாக்கத் திட்டமிட்டிருந்தது.

மைக் வால்ட்ஸ்
இருப்பினும், இது தொடர்பான ரகசியத் தகவல்கள் அனைத்தும் தி அட்லாண்டிக் என்ற ஊடகத்தில் முன்கூட்டியே வெளியானது. இது அப்போது உலகெங்கும் பேசுபொருளானது. விசாரணையில் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் என்பவரே இதைத் தவறுதலாக க்ரூப் சாட்டில் பகிர்ந்தது தெரிய வந்தது.
அதாவது வாட்ஸ்அப்பை போலவே சிக்னல் என்ற ஒரு செயலி இருக்கிறது. இதன் மெசேஜ்களை யாரும் டிராக் செய்ய முடியாது என்பதால் டாப் அதிகாரிகள் இந்தச் செயலியைத் தான் பயன்படுத்துவார்கள். இந்த சிக்னல் செயலியில் டாப் அமெரிக்க அதிகாரிகள் இருந்துள்ளனர். அப்போது இந்த க்ரூப்பில் தி அட்லாண்டிக் பத்திரிகையாளர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க் என்பவரைத் தவறுதலாக மைக் வால்ட்ஸ் சேர்த்துள்ளார்.
ராஜினாமா
அதன் பிறகு ஹவுதி தாக்குதல் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதையெல்லாம் ஸ்கீன்ஷாட் எடுத்து அவர் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுவிட்டார். இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மைக் வால்ட்ஸின் இந்தச் செயல் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கே பெரிய அச்சுறுத்தலாக மாறியதாகவும் இதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
இருப்பினும், அப்போது டிரம்ப் அவருக்கு ஆதரவாகவே இருந்தார். மைக் வால்ட்ஸ் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் அதில் அவர் பாடம் கற்றுக்கொண்டதாகவும் டிரம்ப் கூறினார். இது மட்டுமின்றி மைக் வால்ட்ஸ் தான் பார்த்ததிலேயே நல்ல மனிதர் என்று சார்டிபிக்கேட் தராத வகையிலும் ஆதரவாகப் பேசினார். ஆனால், இப்போது சில வாரங்களில் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.
மனம் மாறிய டிரம்ப்
ராணுவ தாக்குதல் தொடர்பான சாட் லீக் ஆனதற்குப் பொறுப்பேற்ற அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் துணைத் தலைவர் அலெக்ஸ் வோங் ஆகியோரை டிரம்ப் டிஸ்மிஸ் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில அமெரிக்க ஊடகங்கள் மைக் வால்ட்ஸ் தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்தாரா இல்லை டிஸ்மிஸ் செய்யப்பட்டாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வத் தகவல் தெரிந்துவிடும்.
அதேபோல அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சரான பீட் ஹெக்செத்திற்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் டிரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய செயல்பாடுகளிலும் டிரம்ப்பிற்குத் திருப்தி இல்லையாம்.
முதல்முறை இல்லை
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில் இருப்போரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனச் சொல்லி டிஸ்மிஸ் செய்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே 2016- 2020ல் அதிபராக இருந்த போது பலரை இதுபோல டிஸ்மிஸ் செய்துள்ளார். இந்தச் சூழலில் தான் அவர் மீண்டும் அதிபராக பதவியேற்றவுடன் மைக் வால்ட்ஸ் முதல் பலிகடா ஆகியுள்ளார்.












Click it and Unblock the Notifications