எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தாத பாக்.. அமெரிக்க அதிபர் மாளிகையில் சம்பவம்! பிறகு வாயே திறக்கல!
வாஷிங்டன்: இந்தியா பாகிஸ்தான் மோதல் இருந்தபோது, பாக். தரப்பு தொடர்ச்சியாகப் பொய்யான தகவல்களைப் பரப்ப முயன்றது. இருப்பினும், இந்தியா அவர்களின் பொய்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியது. இதற்கிடையே இப்போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலேயே பாகிஸ்தான் அசிங்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது எல்லையோர பகுதிகளில் பாக். தாக்குதல் நடத்த முயன்றது. இந்தியா அந்த தாக்குதல்களை முறியடித்த நிலையில், பதிலடியும் கொடுத்தது. அந்த பதிலடியைத் தாங்க முடியாமலேயே பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்தது. இந்தியாவும் பொதுமக்கள் நலன் கருதி அதை ஏற்றுக்கொண்டது.

ஆனால், இந்த மோதல் காலகட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் பல்வேறு பொய்யான உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பியது. வீடியோ கேம் காட்சிகளை எல்லாம் தாக்குதல் வீடியோ எனப் பரப்பினார்கள். ஆனால், இந்தியா அந்த பொய் பிரச்சாரத்தையும் முறியடித்தது.
பாகிஸ்தான்
சர்வதேச மீடியாக்களில் கூட பேட்டிகளின்போது பொய்யான தகவல்களை அந்நாட்டு அமைச்சர்கள் வழங்கினர். இருப்பினும், அதற்குக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அவர்கள் திணறினர். இது சர்வதேச அளவில் பாகிஸ்தானை அம்பலப்படுத்தியது. இப்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதுவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் மாளிகை
வெள்ளை மாளிகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் நிருபர் ஒருவர் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கேள்விகளைக் கேட்டு வந்தார். பிரதமர் மோடி மோதலை நிறுத்த விரும்பவில்லை என்பது போலவும் அவர் சொல்ல முயன்றார். இருப்பினும், அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட்டியின் பதில் அந்த பாக். நிருபரின் வாயை அடைத்துவிட்டது.
அதாவது அந்த பாக். நிருபர், "மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்பின் முயற்சிகளைப் பாகிஸ்தான் வரவேற்றது.. மேலும் காஷ்மீர் பிரச்சினையில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தினால் டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசும் கிடைக்கும் என நம்புகிறோம். ஆனால் பிரதமர் மோடி இந்த முயற்சியை வரவேற்கவில்லை... இது ஏமாற்றம் தருகிறதா" எனக் கேட்டார்.
இடம் கொடுக்காத அமெரிக்கா
அவர் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட செய்தி தொடர்பாளர் டாமி, அதற்குச் சற்றும் இடம் தரவில்லை. அமெரிக்காவின் கவனம் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே எங்கள் விருப்பம். அதில் தான் எங்கள் கவனம் இருந்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அணுசக்தி திறன் கொண்ட நாடுகள் அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு
ஆனால், அப்போதும் பாக். செய்தியாளர் விடவில்லை. ஆபரேஷன் சிந்தூரில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை இந்தியா பயன்படுத்தியதில் டிரம்பிற்கு கோபம் இருக்கிறதா என கேட்டார். ஆபிரகாம் ஒப்பந்தங்கள் மூலம் யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்க டிரம்ப் விரும்பும் நிலையில், இஸ்ரேல் ட்ரோன்களை இந்தியா பயன்படுத்துவது நிலைமையைச் சிக்கலாக்கும் என கருதுகிறீர்களா எனக் கேட்டார். அப்போதும் கூட டாமி பிகோட்டி இந்தியா மீது எந்தவொரு விமர்சனத்தையும் வைக்கவில்லை. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே கவனம் என்று மட்டும் பதிலளித்தார்.
வாயே திறக்கவில்லை
எப்படியாவது இந்தியா அல்லது பிரதமர் மோடிக்கு எதிராக எதாவது ஒரு பாயிண்டை வாங்கிவிட வேண்டும் என அவர் எவ்வளவோ முயன்றார். ஆனால், டாமி பிகோட்டி மிகத் தெளிவாக அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கூறிவிட்டதால்.. வாயடைத்துப் போனார். அதன் பிறகு பிரஸ் மீட் முடியும் வரை அவர் வாயே திறக்கவில்லை.
இந்தியா திருப்பி அடிக்க தொடங்கிய போது பாக். ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி உட்பட பல இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ தான் இந்தியாவிடம் மோதல் வேண்டாம் எனச் சொன்னார். அதைத் தொடர்ந்தே மோதல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications