ஈரான் தாக்குதலுக்கு பயந்து.. உணவு வாகனத்தில் பதுங்கிய அதிபர் டிரம்ப்.. வெளியான புதிய தகவல்
வாஷிங்டன்: துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்ப் அங்கிருந்து பிரிட்டன் செல்லும்போது சிறிய விமானத்தில் சென்றுள்ளார். அதாவது டிரம்பிற்கு கொலை மிரட்டல் வந்த நிலையில், இதனால் அவரை சிறிய விமானத்தில் அவசர அவசரமாக அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவர் உணவு வாகனத்திலும் கூட பயணித்ததாக தகவல் வெளியான நிலையில், இதை டிரம்ப்பே உறுதி செய்துள்ளார். பாதுகாப்பு படை அறிவுறுத்தலின்படி தான் செயல்பட்டதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் சமீபத்தில் டிரம்பின் பாதுகாப்பு தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது. அதாவது கடந்த ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்றார். அவர் துருக்கி செல்லும்போது கத்தார் வழங்கிய புதிய போயிங் 747-8 விமானத்தில் பயணம் செய்திருந்தார். ஆனால், துருக்கியில் இருந்து பிரிட்டனுக்குப் புறப்படும்போது அந்த விமானத்தில் டிரம்ப் பயணிக்கவில்லை.

உணவு வாகனம்
அதற்கு பதிலாக, அவரை சிறிய C-32A அமெரிக்க ராணுவ விமானத்திற்கு டிரம்ப் ரகசியமாக மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக விமான நிலையத்தில் டிரம்ப் உணவு வாகனத்தின் மூலம் அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதேநேரம் வழக்கமான ஏர் போர்ஸ் ஒன்விமானத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்கள் தொடர்ந்து பயணம் செய்தனர். அதாவது டிரம்ப் அந்த விமானத்தில்தான் இருக்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டு, டிரம்ப்பை சிறிய விமானம் மூலம் பிரிட்டன் அழைத்து சென்றனர்.
டிரம்ப்
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட இந்த செய்தியின் அடிப்படையில் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது. விமானம் மாற்றப்பட்டது உண்மை தான் என்றும் பாதுகாப்புப் படையினரின் உத்தரவை தான் பின்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும், "நான் சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவத்தின் அறிவுறுத்தலின்படி நடப்பேன். அவர்கள் வேறு விமானத்தில் செல்ல வேண்டும் என்று விரும்பினர். நான் அவர்கள் சொல்வதை செய்கிறேன். ஏதோ ஒரு மிரட்டல் இருந்ததாக நினைக்கிறேன். அதைப் பற்றி நான் அதிகம் விசாரிக்கவில்லை. எனக்கு நிறைய மிரட்டல்கள் வருகின்றன" என்று டிரம்ப் கூறினார்.
உண்மை தான்
உண்மையில் நான் சென்ற விமானம் தான் அதிக ஆபத்தில் இருந்ததாக நினைக்கிறேன். ஏனென்றால் என்னை குறிவைக்க நினைப்பவர்கள் அந்த விமானத்தையே குறிவைக்க அதிக வாய்ப்புள்ளது. எந்தவொரு முக்கிய தலைவருக்கும் நிறைய மிரட்டல்கள் இருக்கும். முக்கியத்துவம் இல்லாத தலைவர்களுக்கு மிரட்டல்கள் வராது. நான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அதிபராக இருக்கலாம். ஆனால், நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரை கொல்வோம் என ஈரான் தொடர்ந்து மிரட்டி வருவது அனைவருக்கும் தெரியும். டிரம்ப் அல்லது அவரது விமானத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவு துறை எச்சரித்திருந்தது. இதன் காரணமாகவே டிரம்ப் துருக்கி வந்த அதே விமானத்தில் மீண்டும் பயணிப்பது பாதுகாப்பானதல்ல என்று சீக்ரெட் சர்வீஸ் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னணி
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கியது. ஈரான் மீது அமெரிக்கா முதலில் தாக்குதலை நடத்தியிருந்தது. அதில் ஈரானின் சுப்ரீம் லீடர் கமேனியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் வகையில் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை கொல்வோம் என ஈரான் தொடர்ந்து கொலை மிரட்டல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
