காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்.. அதிர வைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் காசா முனையை அமெரிக்கா கைப்பற்றும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருடனான செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறிய டிரம்ப், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறினார். டொனால்டு டிரம்பின் இந்த முன்மொழிவு சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபரக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கோண்டு வருகிறார். பல்வேறு உலக தலைவர்களையும் தொடர்ச்சியக சந்தித்து வருகிறார். அந்த வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கோண்டார்.

டிரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமரின் இந்த அமெரிக்க பயணம் முக்கியத்துவம் பெற்றது. அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டொனல்டு டிரம்ப், காசா முனையை அமெரிக்கா கைப்பற்றும் என்று அதிரடியாக பேசினார்.
டிரம்ப் கூறுகையில், பாலஸ்தீனத்தில் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா முனையை அமெரிக்கா கைப்பற்றும். பாலஸ்தீனியர்கள் வேறு இடத்தில் குடியேறிய பிறகு அந்த இடத்தை மேம்படுத்தி அதை சொந்தமாக்கி கொள்வோம். அங்கு உள்ள அனைத்து ஆபத்தான வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றப்படும்.
காசா முனையை கைப்பற்றுவோம்
இதற்கு நாங்கள் பொறுப்பு. பொருளாதாரத்தை மேம்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம். தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக அப்பகுதியில் அமைதியை நிலையை நாட்டுவோம். இவ்வாறு டிரம்ப் பேசினார்.
மேலும், காசா முனையில் உள்ள பாலஸ்தீனியர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று டிரம்ப் கூறியுள்ளார். அதே வேளையில், டிரம்பின் இந்த பரிந்துரையை ஏற்கனவே பாலஸ்தீனம் மற்றும் பிற நாடுகள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் நீண்ட காலாம மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் ஏற்பட்டது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பலரையும் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.
கடந்த 15 மாதங்களாக இருதரப்பு இடையே போர் நடந்து வந்தது. இந்த தாக்குதலில் காசாவில் 46,000 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். இஸ்ரேல் 1,600 பேரை பலி கொடுத்துள்ளது. அதோடு காசாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதுதவிர பல லட்சம் பேர் உயிருக்கு பயந்து காசாவை காலி செய்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த பல நாடுகள் முயன்றன. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கேட்கவில்லை. இறுதியாக போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது. அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வந்த நிலையில் இருதரப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.












Click it and Unblock the Notifications