உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? ரஷ்ய அதிபர் புதினுக்கு ஃபோன் போட்ட டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் டொனால்டு டிரம்ப், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய நிலையில் புதினுடனும் தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த உரையாடலின் போது, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தக் கூடாது என்று டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் வைத்து டொனால்டு டிரம்ப், புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்ய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் பேசியதாக தகவல் வெளியானாலும் டிரம்பின் பிரதிநிதிகள் இதை உறுதி செய்யவில்லை. ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.
உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. ஆனாலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவி அளித்தன. இதனால், உக்ரைனும் ரஷ்யாவுக்கும் கடும் சவால் அளித்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள சூழலில், போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் டிரம்ப், புதினுடன் தொலைபேசியில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் பேசியிருந்தார். அப்போது எலான் மஸ்க்கையும் டிரம்ப், ஜெலன்ஸ்கி பேச வைத்து இருந்தார்.
தான் வெற்றி பெற்றால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடித்துவிடுவேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், டிரம்பின் இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ற எதிபார்ப்பும் சர்வதேச நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications