"டிரம்ப் ஜலசந்தி" ஹார்முஸ் பெயரை மாற்றுங்க! அமெரிக்க அதிபர் பதிவுக்கு வெள்ளை மாளிகை பதிலை பாருங்க
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக கூறி வரும் அந்த நாட்டின் அதிபர் டிரம்ப், முக்கியமான அந்த ஜலசந்திக்கு டிரம்ப் ஜலசந்தி என பெயரை மாற்றலாம் என்று தனது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். டிரம்பின் இந்த பதிவுக்கு வெள்ளை மாளிகை அளித்து இருக்கக் கூடிய பதில் நெட்டிசன்கள் இடையே வைரலாகி வருகிறது.
அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையேயான போர் 6 மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய சில நாட்களில் உலக எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடி போல விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து தடைபட்டதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

டிரம்ப் ஜலசந்தி
ஈரான் - அமெரிக்கா தொடர்ந்து மோதி வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போது வரை நெருக்கடி தொடர்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். அங்குள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டதாகவும் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தார். ஆனால், டிரம்பின் இந்த கருத்தை ஈரான் திட்டவட்டமாக மறுத்து வரும் ஈரான், தங்களின் அனுமதியின்றி சென்றால் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரித்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. டிரம்ப் கூறுகையில், "அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் தற்போது ஹார்முஸ் ஜலசந்தி இருப்பதால், அதன் பெயரை இனி டிரம்ப் ஜலசந்தி என மாற்றலாமா? அமெரிக்காவை போலவே இது முன்னெப்போதையும் விட மிகவும் சூடாக இருக்கும்"என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகை பதில்
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த பதிவுக்கு வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு சுவாரசியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வெள்ளை மாளிகை கூறும் போது, "கேட்பதற்கு நன்றாக இருக்கிறது" என்று பதிவிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இப்படி பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைப்பது இது முதல் முறையல்ல. அண்டை நாடான கனடாவுடன் மோதல் போக்குடன் செயல்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டில் உள்ள ஒனாரியோ ஏரியை லேக் அமெரிக்கா என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பேசியிருந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை 'அமெரிக்கா வளைகுடா' என மாற்றியமைப்பதாக கூறியிருந்தார். கடந்த சில வாரங்களாகவே ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கைப்பற்ற போவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க பிராந்தியத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிடும் வரைபடம் ஒன்றையும் அண்மையில் வெளியிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications
