"கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்.." தீவிர சிகிச்சையில் அதிபர் டிரம்ப்? வெள்ளை மாளிகை சொன்ன தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்காக அவர் மருத்துவமனையில் சீக்ரெட்டாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து மிக முக்கியமான ஒரு விளக்கம் வந்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா போரை நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஆரம்பித்த போர் இன்னும் தொடர்கிறது. அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தி வருகிறது. அங்கு நிலவும் சூழலை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.

டிரம்ப் உடல்நிலை
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்பின் உடல்நிலை குறித்துக் கடந்த சில நாட்களாகவே பல்வேறு தகவல்கள் பரவியது. அதாவது டிரம்ப் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின. நெட்டிசன்கள் சிலர் டிரம்ப் உயிரிழந்துவிட்டதாகவும் கூட சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பரப்பி வந்தன.
இதற்கு முக்கிய காரணமே அதிபர் டிரம்பின் திடீர் பிளான் சேஞ்ச் தான். அதாவது டிரம்ப் எப்போதும் வார இறுதியில் தனது மார்-அ-லாகோ வில்லாவில் கோல்ப் விளையாடுவார். ஆனால், இந்த வாரம் அவர் அதுபோல எதுவும் செய்யவில்லை. இத்தோடு இணையத்தில் டிரம்ப் உடல்நிலை தொடர்பான பழைய வீடியோவும் பரவியது. இதுவே இணையத்தில் அவரது உடல்நிலை குறித்த சர்ச்சையைக் கிளப்பியது.
டிரம்ப்
ஒரு பக்கம் போர் போய்க் கொண்டு இருக்கும் சூழலில், டிரம்ப் உடல்நிலை குறித்து வெளியான இந்த தகவல் பலருக்கும் கவலையை ஏற்படுத்துவதாகவே இருந்தது. இதற்கிடையே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் இருந்து விளக்கம் வந்துள்ளது. ஈஸ்டர் மற்றும் வீக் எண்ட்டில் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் ஓய்வின்றி உழைத்தார் என வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியுங் தெரிவித்தார். வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் டிரம்ப் சிகிச்சை பெற்றதாக தகவல் பரவிய நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது.
வெள்ளை மாளிகை விளக்கம்
இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் சியுங் மேலும், "அமெரிக்க மக்களுக்காக டிரம்ப் கடினமாக உழைத்து வருகிறார். அவரை போன்ற ஒரு உழைப்பாளியை உங்களால் பார்க்கவே முடியாது. இந்த ஈஸ்டர் வார இறுதியில் அவர் வெள்ளை மாளிகை மற்றும் ஓவல் அலுவலகத்தில் இடைவிடாது மக்களுக்காக வேலை செய்தார். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்" என்று பதிவிட்டார்.
கடந்தாண்டு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற அதிபர் டிரம்பின் உடல்நிலை குறித்துத் தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது. பேசும்போது வாய் குளறுவது, விமான படிக்கட்டு ஏறும்போது தடுமாறுவது என அவரது உடல்நிலையில் தடுமாற்றம் தெரிகிறது. இதன் காரணமாகவே 79 வயதான டிரம்பின் உடல்நிலை குறித்து விவாதம் தொடர்கிறது.
பேசுபொருள்
என்னப்பா 79 வயதிற்கே இப்படியா.. இந்தியாவில் 80, 85 வயதைக் கடந்தாலும் பதவியில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அமெரிக்காவில் எப்போதும் அதிபரின் உடல்நிலையை அந்நாட்டு மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள். உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை வழிநடத்தும் நபர் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். இதன் காரணமாகவே அவரது உடல்நிலை தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.












Click it and Unblock the Notifications