முடிவுக்கு வரும் போர்? புதின் - ஜெலன்ஸ்கி விரைவில் சந்திக்க போறாங்க.. டிரம்ப் சொன்ன மேஜர் விஷயம்
வாஷிங்டன்: புதினை சந்தித்த கையோடு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய டிரம்ப், புதின் - ஜெலன்ஸ்கி இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரை நிறுத்த டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது ஜெலன்ஸ்கி - டிரம்ப் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

உக்ரைன் ரஷ்யா போர்
பேச்சுவார்த்தையை பாதியில் முடித்து வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெளியேற்றினார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. புதினுடன் கடந்த 15 ஆம் தேதி ஆலோசனை நடத்திய டிரம்ப், அதன் தொடர்ச்சியாக வெள்ளை மாளிகைக்கு ஜெலன்ஸ்கியை அழைத்தார்.
கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
இதன்படி வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருகை தந்தார். இதையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய நேரப்படி நள்ளிரவு நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் பங்கேற்றனர்.
டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்புக்கு பிறகு பேசிய டிரம்ப், நல்ல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன், பல வழிகளில் மிகவும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு ரஷ்ய அதிபருடன் ஒரு நல்ல சந்திப்பை நடத்தினோம். அதிலிருந்து ஏதாவது நல்ல செய்தி வர வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.
போர் முடிவுக்கு வரப்போகிறது
இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியமானது. போர் முடிவுக்கு வரப்போகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார், விளாடிமிர் புடின் அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார். முழு உலகமும் போரைக் கண்டு சோர்வடைந்துவிட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். நான் 6 போர்களை முடித்துள்ளேன்' என்றெல்லாம் டிரம்ப் பேசியிருந்தார்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், புதினுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார். புதினுடன் தொலைபேசியில் பேசியதாக கூறிய டிரம்ப், இருவருக்கும் இடையேயான சந்திப்புக்கு ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டேன். சந்திக்கும் இடம் விரைவில் முடிவு செய்யபடும்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு
அதன்பிறகு ஜெலன்ஸ்கி - புதினை நானும் சந்திப்பேன். ரஷ்யா/ உக்ரைன் போர் நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், 'போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவி அவசியம்' என்றார்.












Click it and Unblock the Notifications