டிரம்ப் VS கமலா ஹாரிஸ்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்வது யார்? சர்வேயில் மாறிய டிரெண்ட்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள்? என்று நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் துணை அதிபர் கமலா ஹாரிசை விட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் துணை அதிபர் வேட்பாளர்களில் யார் வெல்வார்கள்? என்பதும் இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் என்பது நான்கு ஆண்டுகளாகும். இதனால் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் என்பது நடந்து வருகிறது. தற்போது அதிபராக ஜோ பைடன் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடவில்லை. ஜோ பைடனுக்கு பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று அக்டோபர் 25ம் தேதியாகிறது. இதனால் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் என்பது சூடுபிடித்துள்ளது.
அதேபோல் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் ‛The Wall Street Journal' சார்பில் புதிய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் டிரெண்ட் என்பது மாறி உள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட டிரம்ப்புக்கு மக்களின் ஆதரவு என்பது அதிகரித்துள்ளதோடு, கமலா ஹாரிசுக்கு குறைந்துள்ளது.
இந்த கருத்து கணிப்பு என்பது அக்டோபர் மாதம் 19ம் தேதி முதல் 22 ம் தேதி வரை அமெரிக்காவில் பதிவு செய்த வாக்காளர்கள் 1,500 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தம் 47 சதவீதம் பேர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிசுக்கு 45 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் கமலா ஹாரிசுக்கு மொத்தம் 49 சதவீதம் வரை ஆதரவு என்பது இருந்தது. மேலும் அவர் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் டொனால்ட் டிரம்ப்பை விட முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது டிரெண்ட் என்பது முற்றிலுமாக மாறி உள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
அதேபோல் துணை அதிபருக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி வேட்பாளர் டிம் வால்ஸ் மற்றும் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜேடி வான்ஸ் ஆகியோரிடம் யார் முன்னிலையில் உள்ளனர்? என்பதும் இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜேடி வான்ஸ் முன்னிலையில் உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு 40 சதவீத ஆதரவு இருந்த நிலையில் தற்போது அந்த ஆதரவு என்பது 45 சதவீதமாகஅதிகரித்தள்ளது.
அதேவேளையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 46 சதவீத ஆதரவுடன் இருந்த டிம் வால்ஸின் செல்வாக்கு என்பது தற்போது 44 சதவீதம் என்ற சரிந்துள்ளது. இதன்மூலம் ‛தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' கருத்து கணிப்பின்படி அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பும், துணை அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கட்சியின் வேட்பாளர் ஜேடி வான்சும் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications