நம்ம ஊரில் தோசைன்னா.. அந்த ஊரில் பிரெஞ்சு பிரைஸ்.. டிரம்ப் செஞ்ச காரியத்தை பாருங்க.. கலகல சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்குள்ள கடை ஒன்றில் பிரெஞ்சு பிரைஸ் பொறித்துக் கொடுக்கிறார். அதன் பிறகு டிரம்ப் சொன்ன விஷயம் தான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நம்ம ஊரில் தேர்தல் வந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது நடந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

அதிபர் தேர்தல்: இட்லி சுடுவது, தோசை சுடுவது என டைப் டைப்பாக வாக்கு கேட்டார்கள். நம்ம ஊரைத் தவிர வேறு யாரும் எங்கும் இது நடக்காது என்று அப்போது பலரும் சொன்னார்கள். ஆனால், உண்மையில் எல்லா நாடுகளிலும் இதே கதை தான். குறிப்பாக, உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கும் இதே தான் நடந்துள்ளது.
அமெரிக்காவில் இன்னும் சில வாரங்களில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் நவ. 5ம் தேதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. அதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
டிரம்ப் செய்த காரியம்: இதுதான் தனது கடைசி தேர்தல் என்று 78 வயதான டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவர் ஓடி ஓடி பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அங்குள்ள பிரபல ஃபாஸ்ட் புட் கடையான மெக்டொனால்ட்ஸில் வேலை செய்துள்ளார். பென்சில்வேனியாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடையில் வேலை செய்த அவர், அங்கு வந்த பொதுமக்களுக்கு பிரெஞ்சு ஃபிரைஸ் செய்து கொடுத்துள்ளார்.
கருப்பு மற்றும் மஞ்சள் ஏப்ரான் அணிந்த டிரம்ப், உருளைக்கிழங்கை எண்ணெய்யில் போட்டு வேக வைக்கிறார். பிறகு அதை எடுத்து உப்பு தூவி சீசன் செய்கிறார். பிறகு அங்கு வரும் மக்கள் சிலருக்கு இந்த பிரஞ்சு பிரைஸை வழங்குகிறார்.
கடைசியில் கமலா ஹாரிஸ் மீதும் தாக்கு: அதன் பிறகு பேசிய டிரம்ப், "எனக்கு இந்த வேலை பிடித்து இருக்கிறது. இது ஜாலியாகவே இருக்கிறது. எனக்கு மெக்டொனால்ட்ஸில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அது ஒரு வழியாக நிறைவேறிவிட்டது. கமலா ஹாரிஸ் இளைமையில் மெக்டொனால்ட்ஸில் வேலை செய்ததாக நிகழ்ச்சியில் பேசினார். ஆனால், அது போலி தகவல்.. அவரை விட நான் அதிகமாகவே மெக்டொனால்ட்ஸில் வேலை செய்து இருக்கிறேன்" என்று ஜாலியாக பேசுகிறார். இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தனது இளம் வயதில் மெக்டொனால்ட்ஸில் வேலை செய்து இருந்ததாக கமலா ஹாரிஸ் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். ஆனால், அவர் மெக்டொனால்ட்ஸில் வேலை செய்ததற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று குடியரசு கட்சியினர் கூறி வருகிறார்கள். அதை தான் இப்போது டிரம்பும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications